தேனி கொட்டக்குடி ஆற்றுப்பால சாலையில் குப்பை மேடான நடைபாதை-மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

தேனி : தேனியில் கொட்டக்குடி ஆற்றுப்பால சாலையில், பொதுமக்கள் நடப்பதற்கு அமைக்கப்பட்ட நடைபாதை குப்பை மேடாக மாறியுள்ளது. சாலையின் ஓரம் கயிறு கட்டி நடப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தேனியில் இருந்து பழனிசெட்டிபட்டி வழியாக கம்பம், போடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலம் கட்டும்போதே பாலத்தின் ஓரம் பயணிகள் நடந்து செல்ல சுமார் 6 அடி அகல நடைமேடை அமைக்கப்பட்டது. இதில், பொதுமக்கள் நடந்து சென்ற நிலையில், பாலத்தில் வாகனங்கள் எவ்வித இடையூறு இல்லாமல் சென்று வந்தன. இந்நிலையில், நடைமேடையில் சிலர் குப்பைகளை கொட்டவும், மாட்டு சாணத்திலான எருவட்டியை காயவைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நெடுஞ்சாலைத் துறையோ, போலீசாரோ அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் நடைமேடையில் நடக்காமல் சாலையில் இறங்கி நடந்து வருகின்றனர். இதனால், விபத்துக்குள்ளாகி வந்தனர். இதை தவிர்க்கும் வகையில் தற்போது போலீசார் போக்குவரத்து பாலத்தில் எருவட்டி காயவைத்துள்ள நடைமேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை விடுத்து, நடைபாதைக்கு கீழே போக்குவரத்துச் சாலையின் ஓரம் கயிறுகட்டி பயணிகள் நடக்க வழி ஏற்படுத்தி உள்ளனர்.

இதனால், போக்குவரத்துக்கான சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் கொட்டக்குடி ஆற்று பாலத்தில் நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: