அனைத்து நகரங்களிலும் 30 மீட்டர் இடைவெளியில் தெரு விளக்குகள் நிறுவப்படுகிறது கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு

* 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்

* பொதுப்பணித்துறையில் ஓராண்டுக்குள் ஆன்லைன் மூலம் டெண்டர் அமல்

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

* பொதுப்பணித்துறையை இரண்டாகப் பிரித்ததால், கட்டிடங்களை கட்டுவதிலும் பராமரிப்பதிலும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது. கட்டுமானத்திற்கான விலை விவர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும். திட்ட மதிப்பீடு, ஒப்பந்தப்புள்ளி, திட்ட மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் பட்டியலிடும் நடைமுறைகள் இவையனைத்தும் ஓராண்டுக்குள்ளாக முழுமையாக மின்னணுமயமாக்கப்படும்.

* அனைத்து மாநகராட்சிகளிலும் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் மற்றும் அனைத்து நகராட்சிகளிலும் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 90 லிட்டர் மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் குடிநீர் வழங்குதல் உறுதி செய்யப்படும்.

* நகர்ப்புறங்களில் உள்ள அனைவருக்கும் கழிப்பறை அணுகும் வசதி ஏற்படுத்தப்பட்டு, திறந்த வெளியில் மலம் கழிக்கும் நடைமுறை முற்றிலும் தடுக்கப்படும். அனைத்து நகர்ப்புற மக்களும் பயன்பெறும் வகையில் பாதாள சாக்கடை திட்டங்கள் அமைக்கப்படும். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட  27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும். கழிவுநீர் அமைப்பின் பராமரிப்பு முழுமையாக இயந்திரமாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

* நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும். அனைத்து நகர்ப்புரங்களிலும் பாதசாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தத்தக்க நடைபாதைகள் அமைக்கப்படும்.  அனைத்து நகரங்களிலும் 30 மீட்டர் இடைவெளியில் தெரு விளக்குகள் நிறுவப்படும்.

* தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புறங்களிலும் ‘நமக்கு நாமே’ திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும். நமக்கு நாமே திட்டத்தில் இதுபோன்ற பணிகளில் கணிசமாக பங்களிப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்.  இத்திட்டத்திற்காக, ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சேவையில் மாநகராட்சி மற்றும் நமது சேவையில் நகராட்சித் திட்டங்கள் மூலமாக அனைவருக்கும் இணையவழி சேவைகளை வழங்குவது உறுதி செய்யப்படும்.

* தற்போதைய பேருந்து நிலையங்களை நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களாக தரம் உயர்த்தும். திருச்சிராப்பள்ளியில் புதியதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் டுபிட்கோ நிதியுதவியுடன் ஏற்படுத்தப்படும்.

* ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 2021-22ம் ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளது.  

* சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு ரூ.2,350 கோடியும், அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: