கொரோனா நிவாரண நிதியில் இருந்து ரூ.11.55 லட்சத்துக்கு கிருமிநாசினி, முகக்கவசம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா?: ஆய்வு செய்ய ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: கொரோனா நிவாரண நிதியில் இருந்து ரூ.11.55 லட்சம் ரூபாய்க்கு கிருமிநாசினி, முகக்கவசம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆய்வு செய்ய ஊரக வளர்ச்சி துறை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் சிவஞானவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா முதல் அலை பரவிய நேரத்தில் பஞ்சாயத்து ஒன்றியம் சார்பில் கொரோனா நிவாரண நிதியில் இருந்து பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும், பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பதற்காகவும் கிருமிநாசினி, முகக்கவசம் மற்றும் கையுறைகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக லிட்டருக்கு 76.50க்கு விற்கப்பட்ட கிருமிநாசினியை 250 ரூபாய்க்கு 5,000 லிட்டர் வாங்கியுள்ளதாகவும், 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட முகக்கவசங்களை 220 ரூபாய்க்கும், 13 ரூபாய்க்கு விற்கப்பட்ட கையுறைகளை 180 ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார். மொத்தம் 11 லட்சத்து 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கு வாங்கப்பட்ட பொருள்களில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போது தனது பேச்சை கருத்தில் கொள்ளாமல் தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் மற்றும் சேலம் ஆட்சியருக்கு புகார் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கொரோனா நிவாரண நிதியில் நடந்த இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யும் பட்சத்தில் புகார் தொடர்பாக தணிக்கை செய்ய ஊரக வளர்ச்சி துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டால் டெபாசிட் தொகை மனுதாரருக்கு திருப்பி அளிக்கலாம் எனவும் முறைகேடுகள் நடந்ததற்கு முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அது சம்பந்தமாக தலைமை செயலாளருக்கு அறிக்கை அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: