சிறுபான்மையின மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதிய திட்டங்கள், சலுகைகளை முறையாக விளம்பரம் செய்ய வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் உத்தரவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வு கூட்டம் நேற்று  நடந்தது. கலெக்டர் ராகுல்நாத்  தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் துரை.ரவிச்சந்திரன்  முன்னிலை வகித்தார். மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் வாயலூரை சேர்ந்த உசேன், திருக்கழுக்குன்றம் சலீம், மாமல்லபுரம் போதகர் துரைராஜ், தென் இந்திய திருச்சபை சென்னை பேராய தலைவர் ஜார்ஜ் ஸ்டீபன் ஆகியோர் தலைமையில், ஆக்கிரமிப்பில் உள்ள வக்புவாரிய, திருச்சபை சொத்துக்களை மீட்க வேண்டும்.  கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இறந்தால் அடக்கம் செய்ய போதிய இடம் ஒதுக்கி தரவேண்டும்.

மெஷினரி மூலம் நடக்கும் ஆரம்ப தமிழ்வழி பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி திட்டத்தை அனுமதிக்க வேண்டும். வழிபாடுகளுக்கு தடையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை வேண்டும். தேவாலயங்கள், மசூதிகள் கட்ட நிதியுதவி வேண்டும். என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். பின்னர், ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது. சிறுபான்மையின மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

அரசு திட்டங்களின் பயன்கள் சிறுபான்மையினருக்கு முழுமையாக சென்று அடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்பது இந்த ஆணையத்தின் முக்கிய பணி.. சிறுபான்மையின மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டங்களையும் செயல்படுத்த தமிழக முதல்வர் அனுமதிக்கமாட்டார். ஆணையத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலித்து 2 வாரத்துக்கு தீர்வு காண வேண்டும். சிறுபான்மையின மக்களுக்கு அரசால் வழங்கப்படும் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை உரிய முறையில் மக்கள் அறிந்து கொள்ளும்படி துறை சார்ந்த அலுவலர்கள் அதனை விளம்பரம் செய்ய வேண்டும் என்றார்.

இதில், எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு எஸ்பி விஜயகுமார்,  செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறபான்மையினர் நல அலுவலர் லலிதா, செங்கல்பட்டு ஆர்டிஓ சாகிதா பர்வின், மாநில சிறுபான்மையினர் நல உறுப்பினர்கள் தமீம் அன்சாரி, ஹர்பஜன் சிங், சூரி, மன்ஜித் சிங் நய்யர், பிரவீன்குமார் தாட்டியா, டாக்டர் ஆ.இருதயம், பிக்கு மௌரியார் புத்தா, காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.பி.நெடுஞ்செழியன், அளவூர் நாகராஜன், வழக்கறிஞர் ஆர்.சுந்தரமூர்த்தி, செந்தில்குமார், சி.ஆர்.பெருமாள், உசேன், நகர தலைவர் பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: