அரசு நிலங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக பயிற்சி நிறுவன கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பணிகள் குறித்து, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று  நடந்தது. வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.  ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது.

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆய்வுக்கூட்டம்  நடத்தப்பட்டது. இதில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்  பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்ட மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நிராகரிக்கப்பட்ட மனுக்கள் குறித்து,  மனுதாரருக்கு தெரிவித்து உரிய முறையில் விளக்கம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளோம்.

2006 முதல் 2011 வரை  முன்னாள் முதல்வர் கலைஞரால் வழங்கப்பட்ட பட்டாக்களின்படி, அதனை அளவீடு செய்து உரியவர்களுக்கு  அந்த இடத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு,  செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உரிய கோப்புகள் முழுமையாக பிரித்து வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனை நிவர்த்தி செய்வது குறித்து, ஆய்வில் விவாதிக்கப்பட்டது.

நிலம் மதிப்பு அதிகம் கொண்ட இந்த 2 மாவட்டங்களிலும், அரசு நிலங்களில் உள்ள  தனியார் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற கலெக்டர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து, மின் இணைப்பு வழங்கப்படும் என்றார். இதில், எம்எல்ஏக்கள் க.சுந்தர்,  எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, எஸ்.அரவிந்த்ரமேஷ், சி.வி.எம்.பி.எழிலரசன்,

செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர், அரசு கூடுதல் தலைமை செயலாளர் கே.பனீந்திர ரெட்டி, நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையர் டாக்டர் டி.ஜி.வினய், கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர்கள் செங்கல்பட்டு மேனுவல்ராஜ், காஞ்சிபுரம் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: