தொழிலதிபரை சிறை பிடித்து சொத்து வாங்கிய வழக்கு இந்து மகா சபை தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி

சென்னை: சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை சிறை பிடித்து சித்ரவதை செய்ததோடு, அவரின் பெயரிலிருந்த சொத்துக்களை எழுதி வாங்கியதாக, திருமங்கலம் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் உட்பட 10 பேர் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இதில், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இந்து மகா சபா தலைவர் ஸ்ரீ கண்டன் என்பவரின் உத்தரவின் பேரில்தான் ராஜேஷை அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தி காவலர்கள் சொத்துகளை எழுதி வாங்கியது தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கில், இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கண்டனை  சி.பி.சி.ஐ.டி போலீசார்  கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்ரீ கண்டன் மீது ஏற்கனவே 4 வழக்குகள் உள்ளன. மத விரோத நடவடிக்கைகளில் அவர் இறங்கலாம். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதை ஏற்று ஸ்ரீகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இந்து மகா சபா என்பது ஒரு காலத்தில் தேவாரம் மற்றும் திருவாசகம் போன்ற பாசுரங்களை பாடுவதற்காக அமைக்கப்பட்டதாக இருந்தது எனவும், தற்போது இந்து மகா சபாக்கள் விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூல் செய்வதற்காகவே உள்ளது எனவும் வேதனை தெரிவித்தார்.

Related Stories: