நேப்பியர் பாலத்தில் செல்பி எடுத்தபோது தவறி கூவத்தில் விழுந்த வாலிபர்: விடிய விடிய தத்தளிப்பு

சென்னை: மெரினா நேப்பியர் பாலம் அருகே நேற்று காலை வாலிபர் கூவம் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு சின்னசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு மூலம் கூவத்தில் தத்தளித்த வாலிபரை மீட்டனர். இதுகுறித்து வாலிபரிடம் நடத்திய விசாரணையில், பெரியமேடு பகுதியை சேர்ந்த கார்த்தி (30), நேற்று முன்தினம் இரவு மெரினா அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது பாலத்தில் அலங்கரிக்கப்பட்ட விளக்குகளில் அருகே நின்று தனது செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயற்சித்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவர் கால் தவறி கூவம் ஆற்றில் விழுந்தார். இடுப்பளவு தண்ணீரில் கடும் துர்நாற்றத்துடன் தத்தளித்தபடி வெளியில் வர முடியாமல் விடிய விடிய 8 மணி நேரம் இருட்டிலேயே தவித்துள்ளார். மேலும், இரவு முழுவதும் அங்கேயே நின்று, `காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என சத்தம்போட்டுள்ளார். ஆனால் யாருக்கும் இந்த சத்தம் கேட்கவில்லை. இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அவ்வழியே வாக்கிங் சென்றவர்கள் சத்தம் கேட்டு பாலத்தின் கீழே எட்டி பார்த்துள்ளனர். அப்போது, கூவத்தில் ஒருவர் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது. தகவல் கிடைத்ததும் துரிதமாக செயல்பட்டு உடனடியாக வாலிபரை மீட்ட போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Related Stories: