இரண்டு ஆண்டுகளில் சென்னையில் வசிக்கும் குழந்தைகளிடம் மாறுகண், கிட்டப்பார்வை பாதிப்பு அதிகரிப்பு: அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் வசிக்கும் குழந்தைகளிடம் கடந்த இரண்டு ஆண்டுகளில், மாறுகண் பாதிப்பு 5 மடங்குகள் அதிகரித்துள்ளது என்று அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் மஞ்சுளா ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின், குழந்தைகளுக்கான முதுநிலை கண் மருத்துவர் மஞ்சுளா ஜெயக்குமார் கூறுகையில்: கொரோனா நிலவும் சூழலில், குழந்தைகள் மத்தியில் மாறுகண் பாதிப்பு இதுவரை காணாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. சென்னையில், கோவிட்-19 தொற்றுக்கு முன்பு ஒரு ஆண்டில் ஒன்று அல்லது இரண்டு பாதிப்புகளையே பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு பத்துக்கும் அதிகமான குழந்தைகள் இப்பாதிப்பினால் சிகிச்சைக்கு வந்துள்ளனர். இது ஒரு கவலையளிக்கும் விஷயம். கிட்டப்பார்வை பாதிப்பு தோன்றுவதும் 25% அளவிற்கு அதிகரித்திருக்கிறது.

பொதுமுடக்க காலத்தின்போது, மிக அருகில் பார்வை செயல்பாடு என்பதில் கல்வி சார்ந்த அல்லது பிற நோக்கங்களுக்காக கணினி, மடிக்கணினி, கைபேசி அல்லது டேப்லெட்களின் திரையை, அடிக்கடி இடைவேளையின்றி நீண்டநேரம் பார்க்கின்றனர்.  இதனால் கண்ணுக்கு ஏற்படும் அழுத்தம், கண்ணை சுருக்கிப் பார்ப்பதற்கு வழிவகுக்கும். கிட்டப்பார்வை பாதிப்பு வளர்ச்சியடைவதை துரிதமாக்கும் விளைவை இது ஏற்படுத்தும். புத்தகங்கள், தாள் வடிவிலான பிற பொருட்கள் மட்டுமின்றி, வெளிச்சத்தை உமிழ்கின்ற டிஜிட்டல் சாதனங்களும், கிட்டப்பார்வை வளர்ச்சியடைவதற்கு சமஅளவில் இடர் வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன. ஆனால், வெளிச்சத்தை உமிழும் டிஜிட்டல் சாதனங்கள், உலர்கண் மற்றும் வெளிச்சத்தைப் பார்க்க இயலாத நிலை போன்ற பிற பிரச்னைகளையும் கூடுதலாக ஏற்படுத்துகின்றன.

ஆன்லைன் முறையிலான வகுப்புகளைத் தவிர்க்க இயலாத போது, மொபைல் போன்களுக்குப் பதிலாக, மடிக்கணினி, கணினி போன்றவற்றை குழந்தைகள் பயன்படுத்துமாறு பெற்றோர் செய்யவேண்டும். ஏனெனில், மொபைல் போன் திரையோடு ஒப்பிடுகையில், இந்த டிஜிட்டல் சாதனங்களிலிருந்து கண்களுக்கு இடைப்பட்ட தூரம் அதிகமாக இருக்கும். சாத்தியமானால், வீட்டிற்கு வெளியே ஒரு நாளில், 1 முதல் 2 மணி நேரங்கள் விளையாடுவதன் மூலம், சூரியஒளி உடலில் படுவதை உறுதிசெய்வது முக்கியம்.

தீவிரமான மாறுகண் பாதிப்பு ஏற்படுமானால், அதை முந்தைய இயல்பு நிலைக்கு மாற்ற இயலாது. ஆகவே, பைனாக்குலர் விஷன் என அழைக்கப்படும் நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கு மாறுகண் பார்வைக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். தீவிர கிட்டப்பார்வை பாதிப்பானது, வேறுபல சிக்கல்களையும் கொண்டிருக்கிறது. சீக்கிரமாகவே கண்புரை உருவாவது, திறந்த கோண கண் அழுத்தநோய், கருவிழி விடுபடல், அட்ரோபிக் மையோபிக் மக்குளோபதி எனப்படும் என்ற கடுமையான, சரிசெய்ய இயலாத பார்வைத்திறனை பாதிக்கின்ற நிலை மற்றும் மையோபிக் ஸ்ட்ராபிஸ்மஸ் பிக்ஸஸ் என்ற ஒரு அரிதான மாறுகண் தீவிர பாதிப்புநிலை ஆகியவை இவற்றுள் அடங்கும். கிட்டப்பார்வை வளர்ச்சி என்பது, பாதிப்பிற்கு ஆளாகும் நபருக்கும், நாட்டுக்கும் ஒரு பொருளாதார சுமையாகவும் இருக்கிறது என்றார்.

Related Stories: