மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சூளகிரி ஒன்றியத்தில் 1,520 நபர்களுக்கு சிகிச்சை

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக முதல்வர் தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது. நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன், தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமுதாய நலப்பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியும் பதிவு செய்து, தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்தப்படுகிறார்கள்.

சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 1,520 நபர்களுக்கு தொற்றா நோய் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு நாளைக்கு 60 நோயாளிகள் வீதம், சுழற்சி முறையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ பரிசோதனை செய்து ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு மாத்திரைகளும், ஆதரவு சிகிச்சை தேவைப்படுவோருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர் ஆகியோர் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பொது சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளை கண்காணித்து வழி நடத்துவார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: