அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.50 கோடி ஏமாற்றிய மாஜி அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன்: கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளர் புகார்

சென்னை:  திருவள்ளுவர் மாவட்டம், பொன்னேரி வட்டம் ஏ.ஆர் பாளையம் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் நேற்று வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் கால்நடை துறை அமைச்சராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தேன். 2018ம் ஆண்டில் கால்நடை துறையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதாக சுற்றறிக்கை வந்ததையடுத்து முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் என்னிடம் உனக்குத் தெரிந்த யாருக்காவது அரசு பணி வேண்டும் என்று கேட்டால் என்னிடம் சிபாரிசுக்கு வா என்று சொன்னார்.

இதையடுத்து பலர் வேலை வாங்கித் தரச் சொல்லி ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை என்னிடம் கொடுத்து அமைச்சரிடம் சிபாரிசு செய்ய சொல்லி கேட்டார்கள். நானும் அந்த பணத்தை அமைச்சரிடம் கொடுத்தேன். அவர், தனது பினாமி ரமேஷ் என்பவரிடம் கொடுக்கச்சொன்னார். அதன்படி ரூ.56 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.32 லட்சம் என சிறுக சிறுக பணத்தை ரமேஷிடம் கொடுத்தேன். இந்நிலையில் அறிவிக்கப்பட்ட அரசு வேலை நீதிமன்றம் மூலமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதை அறிந்து பணம் கொடுத்தவர்கள் என்னிடம் வந்து கேட்டனர்.

இதை நான் அமைச்சரின் சொன்னேன். தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார். இந்நிலையில் ஆட்சி மாறியது கொடுத்த ரூ.1.50 லட்சம் கோடி பணத்தை கேட்டபோது, ‘நீ யார் என்று எனக்கு தெரியாது. பணம்  தர முடியாது. தகராறு செய்தால் உன்னை கொன்று விடுவேன்’ என்று மிரட்டினார். என்னையும் என் குடும்பத்தாரையும் அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டுகிறார்கள். எனவே இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது பினாமி ரமேஷ் ஆகியோரிடம் ரூ.1.50 கோடியை பெற்றுத்தர வேண்டும். கொலை மிரட்டல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: