ஆடி அமாவாசையை முன்னிட்டு வைகை ஆற்றில் தடையை மீறி முன்னோர்களுக்கு தர்ப்பணம்-திருவேடகத்தில் போலீசார் தடை

மதுரை : ஆடி அமாவாசையை முன்னிட்டு, மதுரை வைகை ஆற்றில் தடையை மீறி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க குவிந்த பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆடி அமாவாசையான நேற்று கோயில்களுக்கு சொந்தமான குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வுக்கு தடைவிதித்து, மதுரை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை முதல் மதுரை வைகை ஆற்றில் கல்பாலம், பேச்சியம்மமன் படித்துறை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தர்ப்பணம் செய்வதற்காக குவிந்தனர்.

மதுரை வைகை ஆற்று கல்பாலம் பகுதியில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அவர்களாக உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தர்ப்பணம் செய்தனர். ஆனால், பேச்சியம்மன் படித்துறை பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி சமூக இடைவெளியின்றி தர்ப்பண நிகழ்வை நடத்தினர். இதனையடுத்து போலீசார் அவர்கள் அனைவரையும் வெளியேற்றியதோடு, வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். மதுரை வைகை ஆற்றில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் ஒரே இடத்தில் குவிந்ததால் வைகை கரையோர பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சோழவந்தான்

மதுரை சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சிவத்திருத்தலமான ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட முக்கிய தினங்களில், இங்குள்ள வைகை ஆற்றங்கரையோரம் முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்து கோயிலில் வழிபடுவது வழக்கம். தற்போது கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக தர்ப்பணம் மற்றும் வழிபாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் வருவதை தடுக்கும் வகையில், திருவேடகம் முதல் மேலக்கால் வரை வைகை ஆற்றுப் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக திருவேடகத்தில் வைகை ஆற்றுக்கு செல்லும் பகுதியை, இரும்புத் தகடுகளால் அடைத்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் ஆடி அமாவாசையான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடனும் திரும்பினர்.

Related Stories: