நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க தடை ஆடி அமாவாசையில் பக்தர்களின்றி வெறிச்சோடிய காவிரி படித்துறைகள்-போலீஸ் பாதுகாப்பு

திருவையாறு : தஞ்சை மாவட்டத்தில் நேற்று ஆடி அமாவாசையன்று காவிரி படித்துறையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு கொரோனா பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருவையாறு, கும்பகோணம் காவிரி படித்துறைகள் வெறிச்சோடி காணப்பட்டது.திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று அப்பர் கயிலைகாட்சி விழா சிறப்பாக நடைபெறும். வெளியூர், வெளிமாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து திருவையாறு காவிரி ஆற்றில் புனித நீராடி அங்கு அமர்ந்திருக்கும் புரோகிதர்களிடம் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஐயாறப்பரை தரிசித்து ஆலயத்தில் வழிபட்டு செல்வார்கள். மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும்.

இரவு ஐயாறப்பர் ஆலய தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சந்நதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் ஆடி அமாவாசை அப்பர் கயிலைகாட்சி நடைபெறும். திருவையாறே விழாகோலமாக காட்சியளிக்கும்.இந்த ஆண்டு ஆடி அமாவாசையில் தமிழக அரசு கொரோனா தொற்றால் ஊரடங்கு அறிவித்துள்ளதாலும், கோவில்களில் விழாக்கள், வழிபாடு நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாலும் நேற்று காலை காவேரி ஆற்று புஷ்பமண்டப படித்துறைக்கு பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடியது.

ஆனால் காலையில் கோயிலிலிருந்து சூலபாணி புறப்பட்டு காவேரி ஆற்றிலும், அப்பர் மூழ்கிய குளத்திலும் குறைந்த அளவே குருக்கள் மூலமாக தீர்த்தவாரி நடைபெற்றது. திருவையாறு காவேரி ஆற்றில் உள்ள அனைத்து படித்துறைகளிலும் யாரும் காவிரியில் குளிக்காமல் இருப்பதற்காக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.திருவையாறு அடுத்த உப்புக்காச்சிபேட்டை காவேரி ஆற்று தென்கரையில் புரோகிதர்கள் ஒரு சில பொதுமக்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர்.

கும்பகோணம்:

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பகோணம் மகாமக குளம் மற்றும் காவிரி படித்துறைகளில் இறந்த முதியோருக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி, பின்பு சுவாமியை வழிபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் ஆடி அமாவாசைக்கு காவிரி குளிப்பதற்கு தடை விதித்துள்ளது. இதனால் காவல்துறையினர் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி சோதனைச்சாவடி அமைத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு சில பக்தர்கள் நேற்று காரில் வந்து ஏமாற்றத்துடன் குளிக்க முடியாமல் திரும்பி சென்றனர்.

கும்பகோணம் மகாமக குளம் படித்துறை, காவேரிக்கரை ஓரங்களில் ஆகிய இடங்களில் பக்தர்கள் குளிக்க வரவேண்டாம் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் சுவாமிமலை காவிரி படித்துறைகளிலும் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையொட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கும்பகோணம் காவேரிபடித்துறை படித்துறைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.இதனால் பலர் தங்களது வீட்டின் மாடியிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Related Stories: