ஆடி அமாவசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு முல்லையாற்றங்கரையில் தர்ப்பணம் செய்த பக்தர்கள்-சுருளி அருவிக்கு அனுமதியில்லை

கம்பம் : ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய சுருளி அருவியில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், சுருளிப்பட்டி முல்லையாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர்.கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சுற்றுலா தலமாகவும், புண்ணியதலமாகவும் விளங்குகிறது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் சுருளி அருவி மூடப்பட்டது.

இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய சுருளி அருவிப்பகுதிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறியாத ஏராளமான வெளியூர் பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்தனர். அவர்களை க.விளக்கு பகுதியில் ராயப்பன்பட்டி போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.

இதனால் பக்தர்கள் சுருளிப்பட்டி தொட்டமந்துறை, களம் பகுதியில் முல்லையாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர். பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் பக்தர்கள் ஆற்றில் இறங்குவதை தடுக்க ராயப்பன்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: