கொரோனா தொற்றை பூஜ்ஜியமாக குறைப்பதை கலெக்டர்கள் இலக்காக கொள்ள வேண்டும்: ஓட்டல்கள், பஸ்களில் விதிமீறலை தடுக்க வேண்டும்; சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா தொற்றை பூஜ்ஜியம் அளவுக்கு குறைப்பதை இலக்காக கொள்ள வேண்டும் என கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரோடு, சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில், முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது கோவிட் தொற்று பரவலில் லேசான மற்றும் மிதமான அதிகரிப்பு தொடர்ந்து காணப்படுகிறது.  

மேற்கண்ட மாவட்டங்கள் உட்பட 19 மாவட்டங்கள், முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது வாரத்திற்கான அதிக தினசரி சராசரியைப் பதிவு செய்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, ஆந்திரா அல்லது கர்நாடகா போன்ற இடங்களுக்குச் செல்லும் 100 சதவீத நபர்களுக்கு தடுப்பூசி போடுவதில் அனைத்து எல்லை மாவட்டங்களும் கவனம் செலுத்த வேண்டும். மாவட்டங்களில்  ஆர்டிபிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கையில் சமரசம் செய்யாமல் கொரோனா தொற்றை பூஜ்ஜியம் அளவுக்கு குறைப்பதை நோக்கமாக கொள்ள வேண்டும். மேலும், இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத முதியவர்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு முழுவதும் தடுப்பூசி போடுவதில், சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளவும்.

2வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு முகாம் வழங்கப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையிடம் இருந்து பட்டியலைப்பபெற்று, அத்தகைய பிரிவுகளுக்கான இரண்டாவது டோஸ் ஊசி வழங்க ஏற்பாடு செய்யுங்கள். சந்தைகள் மற்றும் நெரிசலான இடங்களில் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் கூட்ட நெரிசலில் இருந்து சீரற்ற மாதிரிகளை எடுக்கவும். நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் சில பேருந்துகள் மற்றும் உணவகங்கள் செயல்படுவது ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே இவற்றின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும்.  டெங்கு, சிக்கன்குனியா பரவ ஆரம்பித்திருப்பது அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

எனவே, கொசு ஒழிப்பு, அதன் முட்டை அழிப்பு, கொசு பெருக்கம், லார்வா ஒழிப்பு மிகவும் அவசியமாகும். இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மட்டுமே ஜிகா கண்டறியப்பட்டிருந்தாலும், எல்லை கண்காணிப்பில் அலட்சியம் இருந்தால், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து எளிதில் பரவும். கடந்த கால தரவுகளின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களும் நிலையான ஹாட்ஸ்பாட்களை அறிந்திருக்கின்றன. தயவுசெய்து இதை உணர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் வேலை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: