விவசாயிகள் தன்னிறைவு பெறும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை அமையும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேட்டி

சென்னை: சென்னை எழிலகத்தில் உள்ள வேளாண்மை துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமையில் வேளாண் துறையின் 2021-22ம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகவரித்துறை ஆணையர் வள்ளலார், உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து விவசாயத்துக்கு தனி பட்ஜெட் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். நம் முதல்வர் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். அந்த வாக்குறுதியை ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் முடிவதற்குள் நிறைவேற்றும் வகையில் வரும் 14ம் தேதி தனி நிதிநிலை அறிக்கை தக்கல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். 18 மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்கங்களை சந்தித்து கூட்டத்தை நடத்தியுள்ளோம்.

வேளாண் வர்த்தக சங்கம், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருடன் விற்பனை குறித்த பயிற்சியை உருவாக்குவது குறித்த ஆலோசனைகளை பெற்றுள்ளோம். இன்று விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்து தமிழக  முழுவதும் உள்ள விவசாய சங்க தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சார்ந்த  விவசாய சங்கங்களை அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம். விவசாயிகளின் நலனை அறிந்து இந்த பட்ஜெட் அமைந்திருக்கும். விவசாயிகள் தன்னிறைவு பெறுகின்ற வகையிலும், அவர்களை பொருளாதாரத்தில் உயர்த்தும் வகையிலும் இந்த பட்ஜெட் அமையும். கரும்பு விவசாயிகளுக்கு ஏற்படும் பல இடற்பாடுகளை தவிர்ப்பது குறித்து அறிவிப்புகள் பட்ஜெட்டில் வரும். கரும்பு நிலுவைத்தொகை கிட்டத்தட்ட 1,200 கோடி பாக்கி இருக்கிறது. பட்ஜெட் முடிந்த பிறகு நலிவுற்ற ஆலைகளை அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு கூறினார்.

Related Stories: