சிவகாசி ரத வீதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு: நகராட்சி கவனிக்குமா?

சிவகாசி: சிவகாசி ரத வீதிகளில் கடைகள் முன்பு தட்டிகள் அமைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சிவகாசி நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளால் வாறுகால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மழைக்காலங்களில் மழைநீருடன் வாறுகால் கழிவுநீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிவகாசி நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உத்தரவின் பேரில் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள வாறுகால் ஆக்கிரமிப்புகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

சிவகாசி பஜார் பகுதியில் உள்ள ரத வீதிகளில் கடைகள், ஸ்டால்கள், நடைபாதை கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்ததால், கடும் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உத்தரவின் பேரில் கீழ ரத வீதிகளில் நேற்று முன்தினம் ஆக்கரிமிப்புகள் அகற்றீ்பட்டன. இதன்மூலம் ரதவீதி சாலைகள் ஆக்கிரமிப்புகள் இன்றி பரந்து விரிந்து காணப்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றிய மறுநாளே மீண்டும் ரத வீதிகளில் வியாபாரிகள் கடைகள் முன்பு ஸ்டால்கள், தட்டி போர்டுகள் வைத்து ஆக்கிரமிப்புகளை துவக்கியுள்ளனர்.

இதனால் ரத வீதிகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் ரத வீதிகளில் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: சிவகாசி கீழ ரத வீதியில் கருப்பசாமி, பெருமாள் கோயில் உள்ளதால் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுகிறது. இந்த சாலை தற்போது இரு வழிச்சாலையாக உள்ளது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த சாலையின் நடுவில் டிவைடர் அமைத்து வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும். கடைகளின் முன்பு ஸ்டால்கள், தட்டி போர்டுகள் அமைத்து வியாபாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: