உடல்நலக்குறைவால் காலமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைவுக்கு கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்திக்கு கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியில் மாநில செயலாளராக, பொதுச்செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவராக, மாநிலங்களவை நியமன உறுப்பினராக என பல்வேறு பொறுப்புகளை வகித்து, கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட திண்டிவனம் கே.ராமமூர்த்தி அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.

அன்னை இந்திரா காந்தி, முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி, மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் தலைமை மீது மிகுந்த பற்றுக்கொண்டு காங்கிரஸ் இயக்கத்தில் செயல் பட்டவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். சட்டமன்ற உறுப்பினராக, மேலவை உறுப்பினராக இருந்தபோது ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர். பின்தங்கிய சமுதாய மக்களின் நலன்களை பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டவர்.

86 வயது நிரம்பிய திரு திண்டிவனம் கே.ராமமூர்த்தி அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: