வடபழனி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கும் நடவடிக்கை ரத்து

சென்னை: வடபழனி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தை அறநிலையத்துறை  கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு தடை கோரி, நிர்வாக கமிட்டி செயலாளர் வினாயகம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.ஜெயப்பிரகாஷ் ஆஜரானார். அரசு தரப்பில் அருண் நடராஜன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, கோயிலில் நிர்வாக குளறுபடி எதுவும் இல்லை என்று வாதிடப்பட்டுள்ளது.

அப்படி இருப்பதாக இருந்தால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி முறைகேட்டை நிரூபித்திருக்க வேண்டும். கோயில் நிர்வாகத்தில் எந்த குற்றச்சாட்டும் இல்லாதபோது அதை நிர்வகிக்க அதிகாரியை நியமித்ததை ஏற்க முடியாது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.மனுதாரர் இந்த விவகாரத்தை தீர்க்க இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு கொடுக்கலாம். அந்த மனுவை அறநிலையத்துறை இணைய ஆணையர் ஆய்வு செய்து 12 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: