சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்-கலெக்டர், எம்பி தொடங்கி வைத்தனர்

சோளிங்கர் : சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், எம்பி ஜெகத்ரட்சகன் தொடங்கி வைத்தனர்.

நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய்கள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர் உள்ளிட்ட நோயாளிகளுக்கு, வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தேவையான மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் வழங்க, இந்தியாவிலேயே முதன்முறையாக, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது.

இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளைகிரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட தொடக்கவிழா நேற்று நடந்தது. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் அசோகன், ஒன்றிய செயலாளர் நாகராஜூ முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் கோபிநாத் வரவேற்றார்.

அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செவிலியர் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்களுக்கான மருத்துவ வாகனத்தை எம்பி ஜெகத்ரட்சகன், கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மருத்துவ பணிகள் துணை இயக்குநர் மணிமாறன் திட்ட விளக்க உரையாற்றினார். முடிவில் டாக்டர் சுஜாதா நன்றி கூறினார். பின்னர் அதே பகுதியில் உள்ள பயனாளியின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று பயனாளிக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையைப் பார்வையிட்டனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன், சுகாதார ஆய்வாளர் சவுந்தர், கிராம சுகாதார செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: