கொல்லிமலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவக்கம்

சேந்தமங்கலம் : கொல்லிமலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை கலெக்டர் ஸ்ரேயா சிங் துவக்கிவைத்தார்.கொல்லிமலை வட்டம், பைல்நாடு மெக்கினி காடு கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்க விழா நேற்று நடந்தது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கலெக்டர் ஸ்ரேயா சிங் குத்துவிளக்கேற்றி, திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், மருத்துவ வாகனத்தை கொடியசைத்து இயக்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு மருந்து பெட்டகங்கள், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட தாய்மார்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், ‘கொல்லிமலையில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு வீடு தேடி சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். கொல்லிமலை முழுவதும் உள்ள குக்கிராமங்களுக்கு நேரடியாக சென்று மருத்துவ உதவி செய்யப்படும்,’ என்றார்.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு தேடி சென்று மருந்துகளை வழங்கினார். பின்னர் அங்குள்ள துணை சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நாமக்கல் ஆர்டிஓ கோட்டைகுமார், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சோமசுந்தரம், சேலம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, சேந்தமங்கலம் மருத்துவ அலுவலர் சாந்தி, ஒன்றியக்குழு தலைவர் மாதேஸ்வரி, தாசில்தார் கிருஷ்ணன், திமுக ஒன்றிய பொறுப்பாளர் செந்தில்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Vஇதையடுத்து, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பெரப்பஞ்சோலை ஊராட்சி புது பாலப்பட்டியில் செல்போன் டவர் அமைக்கும் பணியை, கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: