கொரோனாவை கையாள்வதில் முப்படைகளின் சேவை பாராட்டுக்குரியது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய புதிய அணுகுமுறை தேவை: குன்னூரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

ஊட்டி: எல்லை பாதுகாப்பு மற்றும் கொரோனா போன்ற பெருந்தொற்றை கையாள்வதில் முப்படைகளின் சேவை பாராட்டுக்குரியது. அதேசமயம், தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய புதிய அணுகுமுறை தேவை என குன்னூரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் (டி.எஸ்.எஸ்.சி.) 77வது பேட்ஜ் பயிற்சி அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து, அவர் பேசியதாவது: நாட்டின் உயர் பாதுகாப்பு அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உள்நாட்டு மயமாக்கல் மற்றும் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைய உத்வேகம் வழங்கப்படுகிறது. முப்படைகளை எதிர்காலத்தில் தயார்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளன. முப்படைகள் அதிக ஒருங்கிணைப்பை நோக்கி செயல்படுவதால், கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு வலுவடையும்.  நம் நாட்டின் முப்படைகளின் அயராத முயற்சி மற்றும் தியாகங்கள் குடிமக்களின் மரியாதையை பெற்றுள்ளன.

போர் மற்றும் சமாதான காலங்களில் அவர்கள் தேசத்திற்கு விலைமதிப்பற்ற சேவையை வழங்கி வருகின்றனர்.  எல்லை பாதுகாப்பு மற்றும் கொரோனா தொற்றை கையாள்வதில் முப்படைகளின் சேவை பாராட்டுக்குரியது. உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை நாடு பாராட்டுகிறது. மாற்றங்கள் நிறைந்த சவாலான காலங்களை நாம் கடந்து செல்கிறோம். தேசியம் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் போர் அல்லாத மோதல்கள் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகின்றன. அனைத்து அம்சங்களையும் பற்றிய முழுமையான புரிதல் தேவை. மாறிவரும் இந்த காலங்களில், நமது தேசிய நலன்களை பாதுகாக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய வழிகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படும். இணைய உலகில் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன.

காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகள் பாதுகாப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 21ம் நூற்றாண்டு சமூகம் அறிவுசார் சமூகம். ஒவ்வொரு பாதுகாப்பு அதிகாரிகளும் அறிவுசார் வீரர்களாக இருக்க வேண்டும். இந்த கல்லூரியில் பெற்ற பயிற்சிஉங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள், அதிநவீன யுக்திகள், தொடர்ச்சியான கற்றல் உங்களை சிறந்த நிபுணர்களாக மாற்றும்.  இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார். நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கல்லூரி கமான்டென்ட் லெப்டினென்ட் ஜெனரல் கலோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: