சினிமா குடோனில் பயங்கர தீ விபத்து: மதுரவாயல் அருகே பரபரப்பு

சென்னை: கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலை அருகே வானகரம் சர்வீஸ் சாலையோரம் பெரிய குடோன் வைத்துள்ளார். இதில்  சினிமா ஷெட் அமைப்பதற்கு தேவையான கட்டில், சேர், சோபா உள்ளிட்ட பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இந்த குடோனில் 20க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். குடோன் அருகிலேயே கார் உதிரி பாகங்கள் விற்பனை குடோன் மற்றும் கார் சர்வீஸ் சென்டரும் உள்ளது. இந்நிலையில், நேற்று பிற்பகல் குடோனிலிருந்து திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதை பார்த்த பணியாளர்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். முடியவில்லை. குடோனில், எளிதில் தீப்பற்றக்கூடிய மர பர்னிச்சர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்ததால் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.  

தகவலறிந்த மதுரவாயல், பூந்தமல்லி, கோயம்பேடு, விருகம்பாக்கம், கிண்டி, எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 15 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் 20க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயை கட்டுக்குள் கொண்டுவர தாமதமானதால் மேலும் சென்னையிலிருந்து புரோண்டோ ஸ்கைலிப்ட் என்னும் 2 ராட்சத தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அதன் மூலம் உயரமான இடத்திலிருந்து தண்ணீரை ஊற்றி தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் குடோனின் இரு பக்கங்களிலிருந்த தடுப்புகள் உடைக்கப்பட்டு தீயை அணைக்க வழி ஏற்படுத்தப்பட்டது.

குடோனில் எரிந்து கொண்டிருந்த தீ, கார் சர்வீஸ் சென்டருக்கும், உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் குடோனுக்கும் பரவியது. தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் அங்கும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், குடோனுக்கு பின்பக்கம் அமைந்துள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை மையம், அதன் அருகில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமினின் மாவட்ட கட்சி அலுவலகம் ஆகியவற்றில் புகை மண்டலம் சூழ்ந்தது. அங்கிருந்த சேர்கள் தீயின் வெப்பத்தால் உருகி சேதமடைந்தன. தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: