கொரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை-பூட்டிய கோயில் வாசல்களில் பக்தர்கள் வழிபாடு

திருப்பத்தூர் : கொரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் பூட்டிய கோயில் வாசல்களில் நின்று பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்டு 9ம் தேதி வரை கூடுதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஆடி மாதம் என்பதால் கோயில்களில் வழிபாடு நடத்த பக்தர்கள் அதிகளவில் திரண்டால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்பதால் ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை உள்ளிட்ட விழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதைதொடர்ந்து, பிரசித்திப்பெற்ற அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆகம விதிப்படி கோயில் ஊழியர்கள் மட்டுமே சிறப்பு பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு போன்ற விழாக்களையொட்டி கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்டு 2ம் தேதி முதல் ஆகஸ்டு 8ம் தேதி வரை அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிரசித்திப்பெற்ற கோயில்கள் மூடப்பட்டன.

இதனால், ஆடிப்பெருக்கு நாளில் விசேஷமாக காணப்படும் வாணியம்பாடி கொடையாஞ்சி பாலாற்றங்கரையில் அமைந்துள்ள பாலமுருகன் கோயில், திருப்பத்தூர் அடுத்த பசிலிக்குட்டை முருகன் கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி முருகன் கோயில், ஆம்பூர் கைலாசகிரி நாதர் உள்ளிட்ட பிரசித்திப்பெற்ற கோயில்கள் நேற்று களையிழந்து காணப்பட்டன.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பூட்டிய கோயில்கள் முன்பாக வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டியப்பனூர் அணைப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆற்று நீரில் நீராடி மகிழ்வார்கள். இந்த ஆண்டு அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆண்டியப்பனூர் அணைப்பகுதியில் பக்தர்கள் வர முடியாதபடி அங்கு போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: