இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசு தலைவர் கலைஞர் படத்தை திறந்து வைத்ததை எண்ணி மகிழ்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசு  தலைவர், தமிழன்னையின் தலைமகனான கலைஞர் திருவுருவ படத்தை திறந்து வைத்ததை  எண்ணி மகிழ்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் திருவுருவ பட திறப்பு விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க நாளாக இந்த ஆகஸ்டு 2ம் நாள் சிறப்பு பெற்றிருக்கிறது. நம்முடைய குடியரசு தலைவரை பொறுத்தவரையில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் நலனை முன்னிறுத்தி வாதிடுவதில், போராடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இந்திய ஆட்சி பணி கிடைத்தும் அதை ஏற்காமல் வழக்கறிஞராக பணியாற்றினார்.

சமூகநீதியை தனது வாழ்வின் இலக்காக கொண்டவர். இத்தனை பெருமைக்குரிய அவர் இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகை தந்திருப்பது நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய ஒன்றாகும். சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு 1920ம் ஆண்டு முதன் முதலாக தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தது. 1921ம் ஆண்டு கன்னாட் கோமகன் முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம் தொடங்கி வைக்கப்படதின் பவள விழா நிகழ்ச்சியும், அதேபோல் 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் கீழ் முதன் முதலாக 1937ம் ஆண்டு ஜூலை திங்களின் ஏற்படுத்தப்பட்ட சென்னை சட்டமன்ற பேரவையின் வைர விழா நிகழ்ச்சியும், 1997ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞர் தலைமையில், தமிழக அரசால் சிறப்புடன் கொண்டாடப்பட்டதை நூற்றாண்டு விழா கொண்டாடுகிற இந்த நாளில் நான் நினைவுகூர விரும்புகிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே மகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்தை முதன் முதலாக நிறைவேற்றிய பெருமை சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு உண்டு. அதோடு, தேவதாசி ஒழிப்பு சட்டம், மகளிருக்கு உள்ளாட்சி பகுதியில் உரிய இடஒதுக்கீடு, பெண் கொடுமைகளை பாதுகாக்க சிறப்பு திட்டம் என மகளிர் நலன் காப்பதில் நாட்டிற்கே முன்னோடி திட்டங்களை உருவாக்கி தந்த பெருமை கொண்டது. அது மட்டுமல்ல, அண்ணா சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய வரலாற்று சிறப்புவாய்ந்த தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தை செல்லுபடியாக்கிட சட்டம் வகுத்தது, நில சீர்திருத்த சட்டம் உருவாக்கி இருக்கிறது. மே தினத்தை அரசு விடுமுறையாக்கி வழிவகுத்தது, மாநில சுயாட்சிக்கான தீர்மானம் நிறைவேறியது, பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை வழங்க சட்டம் கொண்டு வரப்பட்டது, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அமைத்திட சட்டம் நிறைவேற்றியது, தகவல் அறியும் உரிமை சட்டத்தை நிறைவேற்றியது என பார்போற்றும் பல்வேறு சட்டங்களை, தீர்மானங்களை நிறைவேற்றிய பெருமை இந்த சட்டமன்றத்துக்கு உண்டு.

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை நிலைநாட்டப்பட்ட மாபெரும் வளாகம் இது. அரசு முத்திரையில் வாய்மையே வெல்லும் என  தமிழ் மொழி அரியணையில் அமர்ந்து அலங்கரிப்பதை கண்டு மகிழ்கிறோம் நாம். மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்கள், ஏழை, எளியவர்கள் என விழிம்பு நிலை மக்களின் நலன் காக்க இந்த சட்டமன்றம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது. நூற்றாண்டு விழா கொண்டாடக்கூடிய இந்த சட்டமன்றத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது ஜனநாயக கடமையை செம்மையாக நிறைவேற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞரை நினைவு கூர்ந்து அவரது திருவுருவ படத்தை திறந்து வைத்திருப்பது அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் அமைந்திருக்கிறது.

1957ம் ஆண்டு இந்த மன்றத்திற்கு முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது தனது கன்னி பேச்சில் நங்கவரம் உழவர்கள் பிரச்னை குறித்து பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்து முத்திரை பதித்தவர். முதலமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக, அமைச்சராக, உறுப்பினராக பல்வேறு பொறுப்புகளில் மக்கள் பணியாற்றி பலரது பாராட்டுக்களையும், அன்பையும் பெற்றவர் தலைவர் கலைஞர். சமூகநீதிக்கும் அடித்தளம் அமைத்தவர், மண்டல் ஆணைய அறிக்கையை செயல்படுத்த தீர்மானம் கொண்டு வந்தவர்.

தமிழ்நாட்டின் காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட காவிரி நடுவர்மன்றத்தை அமைக்க கோரக்கூடிய தீர்மானம், தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிட அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம், மாணவர்கள் உயர் கல்வி பெறுவதில் இருந்த இடறல்களை நீக்கி நுழைவு தேர்வை ஒழிக்கும் சட்டம் இதுபோன்ற பல்வேறு புரட்சிகர சீர்திருத்த தீர்மானங்களையும், சட்டங்களையும் ஏற்றி தமிழர்களின் வாழ்விலே ஒளியேற்றிய தலைவர் கலைஞர்.

அவரது 50 ஆண்டு கால சட்டமன்ற பணிகளை பாராட்டி நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய பொதுவுடைமை போராளியும், முன்னாள் மக்களவை தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி, கொள்கைகளுக்காகவும், லட்சியங்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அதற்கு தீங்கு வரும்போது எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருந்தவர் கலைஞர் என பாராட்டி பேசியதை நினைத்து பார்க்கும்போது கலைஞர், இந்திய துணை கண்டத்தில் எத்தகைய ஒரு மாபெரும் தலைவராக விளங்கினார் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும்.

கலைஞரின் திருவுருவ படத்தை பார்க்கும்போது, சர் பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார் தொடங்கி இனமான பேராசிரியர் வரையிலான பல மாபெரும் தலைவர்களின் முகங்களை நான் காண்கின்றேன். இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசு தலைவர் தமிழன்னையின் தலைமகனான கலைஞர் திருவுருவ படத்தை திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டு முதலமைச்சராக மகிழ்கிறேன். கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன். ஜனநாயக மாண்பை காக்கும் தமிழ்நாடு சட்டமன்றம் இன்னும் பல நூறாண்டு விழாக்களை கண்டு அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சட்டங்களை இயற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசு தலைவர் தமிழன்னையின் தலைமகனான கலைஞர் திருவுருவ படத்தை திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டு  முதலமைச்சராக மகிழ்கிறேன். கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன்.

Related Stories: