தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றவர் கலைஞர்: கவர்னர் பன்வாரிலால் புகழாரம்

சென்னை: தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்களின், குறிப்பாக ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் இதயங்களை வென்றவர் கலைஞர் என்றும், அவர் மக்களின் முதல்வர் என அன்புடன் அழைக்கப்பட்டார் என்றும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக சட்டமன்றப்பேரவை வளாகத்தில் நடந்த சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திறப்பு விழாவில் பங்கேற்றார்.

விழாவில் அவர் பேசியதாவது: நவீன இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி 1927ம் ஆண்டு சென்னை சட்டமன்ற மேலவையில் இணைந்ததை நான் இங்கு நினைவு கூர விழைகிறேன். 1921ம் ஆண்டில் பெண்களுக்கான வாக்குரிமை தீர்மானம் கொண்டு வந்ததற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்ட சட்டமன்ற மேலவை தொடங்கப்பட்டு 100வது ஆண்டு நிறைவு அடைந்ததை இன்றைய நாளில் நாம் பெருமிதத்துடன் நினைவு கூறுகிறோம். தமிழக சட்டப் பேரவைக்கு ஒரு பெரிய வரலாறு உண்டு. சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், கல்வி, வறுமை ஒழிப்பு, மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட விளிம்பு நிலையிலுள்ள மக்களின் நலன் போன்ற முன்னோடித் திட்டங்கள் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளன.

கலைஞர் என்றும் முத்தமிழ் அறிஞர் என்றும் அழைக்கப்படும் கலைஞர் தன்னுடைய பேச்சுத்திறமையால் மக்களை ஈர்த்தார். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்ததும், தனது அரசியல் வாழ்க்கையில் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றதும் உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்அவர் இறக்கும் வரை இந்த சபையின் உறுப்பினராக இருந்தார். டாக்டர் கருணாநிதியின் புகழுக்கு ஆதாரமாகவும் அவரது பெருமைக்கு காரணமாகவும் திகழ்ந்தது தமிழ் மொழியின் மீது அவருக்கு இருந்த அளப்பரிய திறமையேயாகும். இது அவரது அரசியல் எதிரிகளையும் கூட வசப்படுத்தியது.

1972ம் ஆண்டில், ராஜாஜி உட்பட பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் சேவைகளுக்காகவும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகவும் விருது பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராஜாஜியால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை அதனால் அப்போதைய முதல்வரான கருணாநிதியிடம், அவர் சார்பாக அப்போதைய ஆளுநரிடமிருந்து விருதைப் பெற்று தன்னிடம் அனுப்புமாறு வேண்டினார். 2.10.1972 அன்று கருணாநிதி ராஜாஜி சார்பில் விருதினைப் பெற்றுக்கொண்டு, 3.10.1972 அன்று அவர் ராஜாஜியின் இல்லத்திற்குச் சென்று, அவருக்கு மாலை அணிவித்து விருதினை வழங்கினார். இதை ராஜாஜி பெரிதும் பாராட்டினார்.

கருணாநிதி தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்களின், குறிப்பாக ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் இதயங்களை வென்றார். அவர் மக்களின் முதல்வர் என அன்புடன் அழைக்கப்பட்டார். கருணாநிதி, சற்றொப்ப ஏழுபது ஆண்டு கால அரசியல் வாழ்வில், நம் நாட்டின் அனைத்து குடியரசுத் தலைவர்களுடனும், அனைத்து பிரதமர்களுடனும், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடனும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் நெருக்கமாகப் பழகியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர் எப்பொழுதும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். இந்த சட்டமன்றம் இனி வரும்காலத்திலும் நம் தேசத்திற்கு முன்னோடியாக திகழட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: