காவல்துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழக போலீசாருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக போலீசாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும். விடுமுறை எடுக்காமல் பணியாற்றும் காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார். தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசார் விடுமுறை இன்றி பணியாற்றுவதால், அவர்கள் மன வேதனை அடைவதாகவும், பலர் மன அழுத்தத்தில் உயிரிழப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதனால் காவலர்களுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு காவலர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால், சில மாவட்டங்களில் அல்லது நகரங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களது பகுதியில் மட்டும் விடுமுறை அளித்து வந்தனர். அவர்கள் மாறிவிட்டால் அந்த விடுமுறையும் ரத்தாகிவிடும்.

இந்நிலையில்தான் திமுக அரசு பதவி ஏற்ற பிறகு காவலர்களின் குறைகளை கேட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும்படி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையர்கள்/ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்காக்க ஏதுவாகவும், தங்களது குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடுவதற்கும் வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.

வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்பட வேண்டும். காவலர்களின் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களின் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாட அந்தந்த நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும். பிறந்த மற்றும் திருமணநாள் வாழ்த்து செய்தி மாவட்ட /  மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: