அதிமுக பொதுக்குழு செல்லாது சசிகலா தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 4க்கு ஒத்திவைப்பு: உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக  பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சசிகலா மற்றும் தினகரனை பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து சசிகலா தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ், அவைத்தலைவர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்க சசிகலா தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  

இந்நிலையில் இந்த வழக்கு  4வது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், பிரதான வழக்கில் இருந்து தினகரன் விலகியதால், அவரது பெயரை நீக்கி  திருத்த மனு தாக்கல்  செய்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்த விசாரணையை நீதிபதி, வரும் 4ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Related Stories: