தலைமை செயலக வளாகத்தில் நின்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் முதல்வர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளை பார்க்க தினசரி ஆயிரக்கணக்கானோர் தலைமை செயலகம் வந்து செல்வார்கள். இவர்களின் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் தலைமை செயலக வளாகத்தின் பின்புறம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். குறிப்பாக, பார்வையாளர்களின் கார்கள் தலைமை செயலகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் வரிசையாக பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும்.

அதன்படி, ராணுவ மைதானத்தில் நேற்று மதியம் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த தலைமை செயலக ஊழியர்கள், அங்கிருந்த தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், காரின் முன் பகுதியில் உள்ள இன்ஜின் பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. ஆனாலும், காரின் இருக்கை பகுதியில் இருந்து புகை வெளியேறியதால், காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை காரின் உள்பகுதியிலும் செலுத்தி தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

இவ்வளவு சம்பவம் நடந்த பிறகும் காரின் உரிமையாளர் அங்கு வராததால், காருக்குள் இருந்த ஆவணங்களை போலீசார் சோதனை செய்தனர். அதில், பெரம்பூரை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரின் பேரில் கார் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும், தலைமை செயலக வளாகத்தில் இருந்து விரைந்து வந்தார். போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். அதில், தலைமை செயலகத்தில் உயர் அதிகாரி ஒருவரை பார்க்க வந்ததாகவும், காரை அங்கு நிறுத்தி விட்டு சென்றபோதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Related Stories: