சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் வைப்பு நிதி ரூ.100 கோடி மோசடி செய்த விவகாரம் இந்தியன் வங்கி மாஜி மேலாளர் உட்பட 3 பேர் வீட்டில் சிபிஐ சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது; கைது திகிலில் ஊழல் அதிகாரிகள்

சென்னை: சென்னை துறைமுகம் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி, 45 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் சென்னை துறைமுகத்தில் நிரந்தர வைப்பு நிதி பணமான ரூ.100 கோடி கோயம்பேடு இந்தியன் வங்கியில் போடப்பட்டது. பணம் போட்ட 3 நாட்களுக்கு பிறகு, கணேஷ் நடராஜன் என்பவர் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குனர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு பல்வேறு ஆவணங்களை வைத்து, சென்னை துறைமுகம் பொறுப்பு கழகத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி பணத்தை 2 நடப்பு கணக்கில் மாற்ற வேண்டும் என்று கூறி அந்த பணத்தை இரண்டாக பிரித்து தலா ரூ.50 கோடிகளாக மாற்றியுள்ளனர். இதற்கு கோயம்பேடு இந்தியன் வங்கியின் மேலாளராக இருந்த சேர்மதி ராஜா உடந்தையாக இருந்துள்ளார். இவருக்கு கூடுதலாக, கணேஷ் நடராஜன், மணிமொழி ஆகிய 2 பேர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதற்கிடையே, கோயம்பேடு இந்தியன் வங்கியில் கணேஷ் நடராஜன், மணிமொழி ஆகியோர், செல்வகுமார் என்ற 3வது நபர் பெயரில் கணக்கு தொடங்க வந்தபோது, அங்குள்ள வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவர்களை பிடித்து கோயம்பேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ரூ.100 கோடி மோசடி வழக்கு என்பதால் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர், இந்த மோசடியில் வங்கி அதிகாரிகள் பலர் சிக்கியுள்ளதால் சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ, சென்னை துறைமுகம் பொறுப்பு கழகத்தின் நிரந்தர வைப்பு நிதி ரூ.100 கோடி மோசடி குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா மற்றும் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குநர் என்று அறிமுகம் செய்து கொண்ட கணேஷ் நடராஜன், மணிமொழி ஆகியோர் முறைகேடாக போலி ஆவணம் மூலம் தங்களது வங்கி கணக்கில் பணத்தை மாற்றியது தெரியவந்தது.

அதைதொடர்ந்து சிபிஐ, கணேஷ் நடராஜன், இடைத்தரகர் மணிமொழி மற்றும் சென்னை கோயம்பேடு இந்தியன் வங்கியின் மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்னர். இந்நிலையில் சென்னையில் உள்ள முன்னாள் இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா, கணேஷ் நடராஜன், மணிமொழி ஆகியோர் வீடுகளில் நேற்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மோசடிக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் 100 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கைது செய்யப்படுவோமோ என்ற திகிலில் உள்ளனர்.

Related Stories: