திருச்சியில் ஆக.5ம் தேதி வரை நடக்கிறது 2ம் நிலை காவலர்களுக்கு உடற்தகுதி தேர்வு துவங்கியது-3,210 பேருக்கு அழைப்பு

திருச்சி :  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பாக 2ம் நிலை காவலர், 2ம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10,906 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் 13ம்தேதி நடந்தது. இதையடுத்து உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுகள் கடந்த ஏப்.21ம்தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா 2ம் அலை அதிகமாக பரவியதால் இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்துள்ளதால் 26ம்தேதி (நேற்று) உடற்தகுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று துவங்கியது. இதில் கொரோனா மருத்துவ பரிசோதனைக்கான அசல் மருத்துவ சான்றிதழுடன் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

திருச்சி, கரூர் மாவட்டத்தில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களான ஆண்கள் 2,204, பெண்கள் 1,005 மற்றும் ஒரு திருநங்கை ஆகியோர் என 3,210 பேருக்கு நேற்று முதல் ஆக.5ம் தேதி வரை திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடக்கிறது. நேற்று முதல் நாள் நாள் தேர்வில் அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், (ஆண்களுக்கு உயரம், மார்பளவு), பெண்கள் மற்றும் திருநங்கைக்கு உயரம் அளத்தல், உடற்தகுதி தேர்வில் ஆண்களுக்கு 1,500 மீட்டர் தூர ஓட்டம், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 400 மீட்டர் தூர ஓட்டம் நடைபெற்றது.

சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த உடற்கூறு தேர்வில் திருச்சி, கரூர் மாவட்டத்தை சேர்ந்த 500 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வானது தமிழ்நாடு சீருடை பணியாளர் துணைக்குழுவின் தலைவர் மற்றும் திருச்சி எஸ்.பி., மூர்த்தி தலைமையில் நடந்தது. இந்த தேர்வை மேன்பட்ட ஆய்வு அதிகாரியான மாநகர கமிஷனர் அருண் மேற்பார்வையிட்டார். ஒவ்வொரு நாளும் 500 பேர் வீதம் வரவழைத்து அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடக்கிறது.

Related Stories: