அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீடு கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கமும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசு உதவி பெறும் கத்தோலிக்க கல்வி சங்கம் சார்பில் மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ் ஆஜராகி, அரசு பள்ளிகளுக்கு தரும் அனைத்து வசதிகளையும், நிதிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அரசு வழங்கி வருகிறது. அரசு பள்ளிகளைப்போல் அரசு உதவி பெறும் பள்ளிகளும் இலவச கல்விதான் தருகின்றன. எனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு தரப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களையும் சேர்க்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் அரசு 4 வாரங்களுக்குள் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

>