இளங்கலை முதலாமாண்டு படிப்புகளுக்கான விண்ணப்பபதிவு துவங்கியது பொறியியல் படிப்புகளுக்கு 25,611 பேர் விண்ணப்பம்: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தகவல்

சென்னை: மாநில கல்வித்திட்டத்தில் பயின்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் கலை, அறிவியல், பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. பொறியியல், பி.டெக் படிப்புகளில் சேர tneaonline.org என்ற இணைய தளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் துவங்கியது.

நேற்று மட்டும் 25,611 மாணவர்கள் பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் 10,084 மாணவர்கள் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். மேலும் 5363 மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை சமர்பித்துள்ளதாக தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்ற பின்னர் அவர்களுக்கான ரேண்டம்  எண்கள் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 4ம் தேதி தரவரிசைப்  பட்டியல் வெளியிடப்பட்டு செப்டம்பர் 7ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. அத்துடன் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 20ம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.

Related Stories: