ஆற்காட்டில் மின்விளக்கு இன்றி இருளில் மூழ்கிக்கிடக்கும் தெருக்கள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆற்காடு : ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பெரிய நகராட்சியாக ஆற்காடு உள்ளது. இந்த ஆற்காடு நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் விளக்குகளை பொருத்தி பராமரிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஆற்காடு தோப்புக்கானா டிரஸ்ஸர் தோட்டம் தெரு, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பல நாட்களாக மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அந்த பகுதியை  சேர்ந்த பொதுமக்கள் வெளியே  செல்ல அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆற்காடு நகரில் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு தெருக்களிலும் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன.

இரவு நேரங்களில் இருளில் மூழ்கி கிடக்கும் தெருக்கள் வழியாக இருசக்கர வாகனங்களிலும்,  நடந்தும்  செல்லும் பொதுமக்களை நாய்கள் துரத்தி சென்று  கடிக்கும் அபாயம் ஏற்படுகிறது. நாய்கள் கூட்டமாக  துரத்தும் போது இரண்டு சக்கர வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்லும் போது விபத்தில் சிக்கும் அவலநிலையும் ஏற்படுகிறது.

எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக  இருளில் மூழ்கிக் கிடக்கும் பல்வேறு தெருக்களில் தெருவிளக்குகளை பொருத்தி கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: