ஜூலை 26 கார்கில் யுத்த வெற்றி தினம்: ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை இன்னுயிரை தந்து விரட்டிய இந்திய ராணுவ வீரர்கள்..!

ஜம்மு: 1999-ல் நாட்டின் பிரதமராக வாஜ்பாய் இருந்தார். பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரி முஷாரப் கையில் நிர்வாகம் இருந்தது. அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் நல்லெண்ணத்தால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பாகிஸ்தானின் லாகூருக்கு பேருந்து பயணத்தை தொடங்கி வைத்து அதில் பயணம் செய்தார் பிரதமர் வாஜ்பாய். காஷ்மீர் சிக்கலுக்கு அமைதி வழியில் தீர்வு காண வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லாகூர் ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்தியாவுடன் நட்பு பாராட்டுவதாக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் யுத்தத்துக்கான சதிகளில் இறங்கினார் சர்வாதிகாரி முஷாரப்.

1999-ல் ஜம்மு காஷ்மீரின் முஷ்கோ பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை சந்தித்து இந்தியாவுக்குள் ஊடுருவி இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க உத்தரவிட்டார் முஷாரப். குளிர்காலம் என்பதால் வழக்கம் போலவே சமவெளிப் பகுதிகளுக்கு இந்திய ராணுவ வீரர்கள் திரும்பியிருந்த தருணம். இதனை சாதகமாக்கி கார்கில் பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டை தாண்டி 130 முதல் 200 சதுர கிலோ மீட்டர் இந்திய நிலப்பரப்பை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆக்கிரமித்தனர். முஷ்கோ பள்ளத்தாக்கு, டிராஸ் அருகில் உள்ள மார்போலா மலை முகடுகள், கார்கிலுக்கு அருகில் உள்ள கக்சர், சிந்து நதியின் கிழக்கு பகுதியில் உள்ள படாலிக், சோர்பாட்லா, சியாச்சின் பனி மலைக்கு தெற்கே அமைந்துள்ள துர்தோக் ஆகிய பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருந்தது.

அங்கே புதிய ராணுவ தளங்களையும் பாகிஸ்தான் ராணுவம் அமைத்தது. மலைமுகடுகளுக்கு கால்நடை மேய்க்க சென்ற இந்தியர்கள், பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து நமது ராணுவத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து படாலிக் பகுதிக்கு சென்ற நமது ராணுவ வீரர்களை பிடித்து சித்ரவதை செய்து ஈவிரக்கம் இன்றி படுகொலை செய்தனர் பாகிஸ்தான் ராணுவத்தினர். பின்னர் கார்கில் ராணுவ கிடங்கு மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்தே பாகிஸ்தானின் ஊடுருவல் உறுதியானது. நம்பிக்கையோடு பேச்சுவார்த்தை நடத்திய நமது முதுகில் குத்திய பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட ராணுவத்தினருக்கு உத்தரவு கொடுத்தார் பிரதமர் வாஜ்பாய். இதனையடுத்து கார்கில் யுத்தம் தொடங்கியது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ஒட்டுமொத்த ராணுவ வீரர்களும் கார்கில் போர்முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஶ்ரீநகர்- லடாக் தேசிய நெடுஞ்சாலையை மீட்பதில் தொடங்கி கார்கில் வரை அங்குலம் அங்குலமாக போராடி நமது நிலப்பகுதிகளை ராணுவ வீரர்கள் மீட்டனர். இதனால் பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கி தப்பி ஓடியது. இதனையடுத்து கார்கில் வெற்றி தினமாக ஜூலை 26 பிரகடனப்படுத்தப்பட்டது. கார்கில் யுத்தத்தில் நாம் 527 மாவீரர்களை இழந்து நம் நிலப்பகுதிகளை மீட்டெடுத்தோம். 1,363 ராணுவ வீரர்கள் இந்த யுத்தத்தில் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 700 பேர் கொல்லப்பட்டனர்.

Related Stories: