ஆன்லைன் மூலம் வேலை தேடும் தமிழக இளைஞர்களை குறிவைத்து பணம் பறிப்பு: வடமாநில ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை

சென்னை: ஆன்லைன் மூலம் வேலை தேடும் தமிழக இளைஞர்களை குறிவைத்து பணம் பறிப்பில் ஈடுபட்டு வரும் வடமாநில ஆன்லைன் மோசடி கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போதிய வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் படித்து முடித்த தமிழக இளைஞர்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைவாய்ப்பை தேடி செல்கின்றனர். அவ்வாறு செல்லும் இளைஞர்கள் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஏதோ ஒரு வகையில் மோசடி கும்பலால் ஏமாற்றப்படுவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, கடந்த 2 வருடங்களாக படித்து முடித்த இளைஞர்கள் மற்றும் ஏற்கனவே வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் என பலரும் ஆன்லைனில் வேலை தேடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இவர்களிடம், வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கலாம், என்று ஆசை வார்த்தை கூறி மூளை சலவை செய்து, வட மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார்கள் அளித்தாலும், போலி முகவரி மற்றும் எண்களை பயன்படுத்துவதால் ஏமாற்றுபவர்களை கண்டறிவதில் சிக்கல் உள்ளது.பட்டப்படிப்பு முடித்து வேலைதேடும் இளைஞர்கள் முதலில் தங்களது பயோடேட்டாவை வேலைவாய்ப்புக்கான வெப்சைட்களில் பதிவிடுகின்றனர். அந்த வெப்சைட்டில் இருந்து, வேலை தேடுபவர்களின் செல்போன் எண் மற்றும் விவரங்களை எடுக்கும் வடமாநில கும்பல், பின்னர் சம்மந்தப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புகின்றனர். வேலைதேடும் இளைஞர்கள் நாம் ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்து உள்ளதால், அங்கிருந்துதான் நமக்கு மெசேஜ் வந்துள்ளது என நம்பி, அந்த மெசேஜில் உள்ள லிங்கை பயன்படுத்தி அதனுள் சென்று பார்க்கின்றனர்.

அதில், அவர்களின் பெயர், முகவரி, ஆதார் எண், பேன் கார்டு எண் உள்ளிட்ட பல விவரங்களை பதிவு செய்யும்படி ஒரு விண்ணப்பம் இடம்பெற்றிருக்கும். அதை பூர்த்தி செய்து அதே அப்ளிகேஷனில் அனுப்பி வைப்பிய பின்னர், 2 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் எங்களது நிறுவன செயலியை தனியாக டவுன்லோட் செய்ய வேண்டும், என்று குறுஞ்செய்தி வரும். அதை டவுன்லோட் செய்ததும், அதில் பல பிரிவுகள் இடம்பெற்றிருக்கும். பகுதி நேர வேலை, முழுநேர வேலை, சம்பளம், பேக்கேஜ், ஆன்லைன் இன்டர்வியூ, போன் இன்டர்வியூ என பல பிரிவுகள் உள்ளன.அதில், விருப்பப்படும் வேலையை தேர்வு செய்த பிறகு, ஆன்லைனில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இன்டர்வியூ எடுப்பார்கள். அதன் பிறகு 2 நாட்கள் கழித்து நீங்கள் குறிப்பிட்ட அந்த வேலைக்கு தேர்வாகி உள்ளீர்கள், மாத சம்பளம் பல ஆயிரங்களில் என மெசேஜ் வரும். பின்னர், நீங்கள் வட மாநிலங்களில் தான் பணிபுரிய வேண்டி இருக்கும். அதை தமிழகத்திற்கு மாற்றித் தர வேண்டுமென்றால், இதற்காக முன்பணமாக நீங்கள் 30 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறுவார்கள்.

இதனை நம்பி தமிழக இளைஞர்கள் பலர் வேலைக்கு ஏற்றார்போல் ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி உள்ளனர். அதுமட்டுமன்றி, முதன்முதலில் இந்த செயலியை டவுன்லோட் செய்து உள்ளே செல்லும்போது ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணம் என்று கூறி 30 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. பணம் குறைவாக உள்ளதால் பலரும் இந்த பணத்தை  கட்டி விடுகின்றனர். இவ்வாறு வேலைக்கு 30 ஆயிரம் ரூபாய் கட்டிய பிறகு அடுத்த 2 நாட்களில் குறிப்பிட்ட அந்த எண் மற்றும் சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்படும். அப்போதுதான் இளைஞர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து காவல்துறைக்கு சென்று புகார் அளிக்கின்றனர். இவ்வாறு தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில இளைஞர்களை குறிவைத்து இந்த வடமாநில கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது. அதுவும் கடந்த 2 வருடங்களாக இவர்களால் ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வடமாநிலத்தில் இருந்து ஆன்லைன் மூலம் இங்கு உள்ள இளைஞர்களை ஏமாற்றுவது தெரியவந்துள்ளது.

 குறிப்பாக வங்கி கணக்கை பயன்படுத்தாமல் கூகுள் பே, போன் பே மூலம் பணத்தை பெறுகின்றனர். அதன்பிறகு அந்த எண்ணை பயன்படுத்தாமல் வேறு மொபைல் எண்ணை பயன்படுத்தி மீண்டும் பலரை ஏமாற்றுகின்றனர். இதனால் அவர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. 100 பேர் பாதிக்கப்பட்டால் குறைந்தது 5 பேருக்கு கூட அவர்கள் இழந்த தொகையை பெற்றுத்தர முடியவில்லை என போலீஸ் உயரதிகாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு தமிழகம் உள்பட தென்மாநில இளைஞர்களை குறிவைத்து தொடர்ந்து ஏமாற்றி வரும் வடமாநில ஆன்லைன் மோசடி கும்பலை பிடிக்க இதுவரை ஒன்றிய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருவதாகவும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒன்றிய அரசு மிகவும் பின்தங்கி உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆன்லைன் டிரேடிங்கில் அபேஸ்

வடமாநிலங்களில் ஆன்லைன் டிரேடிங் என கூறி இளைஞர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கு மாதம் மாதம் வட்டி தருவதாக கூறி ஒரு கும்பல் பணம் பறித்து வருகிறது. அவ்வாறு பணம் பறிக்கும் கும்பல் குறிப்பிட்ட சில மாதங்கள் சரியாக வட்டி கொடுத்து விடுகின்றனர். இதனால் வட்டிக்கு ஆசைப்பட்டு மேலும் அதிக பணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்தும் போது குறிப்பிட்ட அந்த ஆன்லைன் டிரேடிங் கும்பல் அந்த வாடிக்கையாளரை நீக்கிவிட்டு இணைப்பை துண்டிக்கும். இதனால் பணத்தை இழந்து வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். சினிமா பட பாணியில் முதலில் வாடிக்கையாளர்களிடம் ஆசையை தூண்டி

 அதன் பிறகு மொத்தமாக ஏமாற்றுவதை இந்த கும்பல் வாடிக்கையாக கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் அக்கவுன்ட்

ஆன்லைன் மூலம் வேலை தேடுபவர்களிடம் தனி செயலி மூலம் ஆதார் எண், பேன் எண் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டு, அதன் மூலம் வேலை தேடுபவர்கள் பெயரிலேயே தனியாக ஒரு அக்கவுன்ட் ஓபன் செய்கிறார்கள். அவ்வாறு அக்கவுன்ட் ஓபன் செய்யும்போது, வேலை தேடுபவர்களின் செல்போனுக்கு ஒரு ஓடிபி வரும். அதை அவர்கள் பார்த்து சொன்னால் மட்டும் போதும். உடனடியாக அக்கவுன்ட் ஓபன் செய்ய முடியும். வேலை தேடுபவர்களை தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், உங்கள் செல்போனுக்கு வந்துள்ள ஓடிபியை சொன்னால்தான் வேலை உறுதியாகும் என பெற்றுக்கொள்கின்றனர்.

பின்னர் வேலை தேடுபவர்களிடமிருந்து பணம் பெறும்போது குறிப்பிட்ட அந்த அக்கவுன்டுக்கு பணத்தை மாற்றி அதன்பின்பு மோசடி கும்பல் அந்த பணத்தை எடுத்து விடுகிறது. இதன் மூலம் தங்களது பெயரிலேயே அக்கவுன்ட் ஓபன் செய்வது தெரியாமல் அனைத்து விவரங்களையம் கொடுத்து ஏமாந்து நிற்கின்றனர் இளைஞர்கள்.

எராளமான எண்கள்

வடமாநில மோசடி கும்பல், போலி சான்றுகளில் ஏராளமான செல்போன் மற்றும் சிம் கார்டுகளை வாங்கி, ஒவ்வொரு மோசடிக்கும் ஒரு செல்போன் எண்ணை பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு நபரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டால் மீண்டும் அந்த நம்பரை பயன்படுத்தாமல், அதை தூக்கி எறிந்து விடுகின்றனர். இதன் மூலம் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

காவல்துறை அறிவுரை

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற ஒரு தவறான கருத்து இளைஞர்களிடையே பரப்பப்படுகிறது. இதனை முதலில் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு வேலை வாய்ப்பாக இருந்தாலும் முதற்கட்டமாக பணம் பெற்றுக் கொண்டு தான் வேலையை தருவோம் என்ற நிலை கிடையாது. அவ்வாறு ஆன்லைனில் நீங்கள் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்று கூறினால் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்பது அர்த்தம். மேலும் முன்பின் தெரியாத நம்பிக்கையில்லாத வெப்சைட்களில் உங்களது தனிநபர் விவரங்களை கொடுப்பது தவறு. இதன் மூலம் உங்களை அறியாமலேயே உங்களது தனிநபர் விவரங்கள் திருடு போகின்றன.

மேலும் வடமாநிலங்களில் இருந்து உங்களை அழைத்து வேலைவாய்ப்பு தருவதாக கூறினால் அவர்களின் அலுவலக முகவரியை நீங்கள் ஆராய வேண்டும்.குறிப்பிட்ட வெப்சைட் மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு சென்று அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் மற்றவர்கள் ஏமாற்றப்படுவதை நீங்கள் தடுக்க முடியும். மேலும் மாதம் அதிகளவு சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தையை கூறும் விளம்பரங்களின் உண்மைத்தன்மையை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.தற்போது கல்லூரி படிப்பு படித்து முடித்த உடனேயே அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்களிடையே உள்ளது.

இதனை மோசடி கும்பல் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே விளம்பரங்களின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து நல்ல வெப்சைட்களை இளைஞர்கள் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பு பெற வேண்டும் என புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா தெரிவித்தார்.

Related Stories: