செல்போன் ஒட்டுக்கேட்பு நடந்ததா, இல்லையா என்பது பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

டெல்லி: செல்போன் ஒட்டுக்கேட்பு நடந்ததா, இல்லையா என்பது பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான என்எஸ்ஓ குழுமம் தயாரித்துள்ள பெகாசஸ் உளவு மென்பொருள் உலக அளவில் சர்ச்சையாகி உள்ளது. செல்போன்களை ஒட்டு கேட்டு தகவல்களை எடுக்கக் கூடிய இந்த மென்பொருள், ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு மட்டுமே விற்கப்படும். அந்த வகையில் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி பல நாடுகளிலும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் கண்காணிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், ஒன்றிய அமைச்சர்கள் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது இந்திய அரசியலில் கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனால், கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கி கிடக்கிறது. இந்நிலையில், பெகாசஸ் தொழில்நுட்பம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; செல்போன் ஒட்டுக்கேட்பு நடந்ததா, இல்லையா என்பது பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும். செல்போன் ஒட்டுக்கேட்பு பற்றி நாடாளுமன்றக் கூட்டுக் குழு மூலம், விசாரணை நடத்த வேண்டும்.

நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணையை விட சிறந்தது நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தான். பதவியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதியை கொண்டு செல்போன் ஒட்டுக்கேட்பு பற்றிய விசாரணையை நடத்தலாம். செல்போன் ஒட்டுக்கேட்பால் தான் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதாக உத்தரவிட முடியாது. எனினும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற ஒட்டுக்கேட்பு உதவியாக இருந்திருக்கலாம். நாடாளுமன்றத்தில் அமைச்சர் வைஷ்ணவ் தாக்கல் செய்த அறிக்கையில் ஒட்டுக்கேட்பு நடக்கவில்லை என்று மறுக்கவில்லை. அங்கீகாரமற்ற ஒட்டுக்கேட்பு ஏதும் நடக்கவில்லை என்று தான் அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு அனுமதி தரும் ஒட்டுக்கேட்புக்கும் அனுமதியின்றி நடக்கும் ஒட்டுக்கேட்புக்கும் வேறுபாடு அறிந்தவர் தான் அமைச்சர். பெகாசஸ் மென்பொருள் வாயிலாக ஒட்டுக்கேட்பு நடந்தது என்றால் அந்த மென்பொருளை வாழங்கியது யார்? பெகாசஸ் மென்பொருளை அரசே கொள்முதல் செய்ததா அல்லது அரசு அமைப்பு ஏதாவது அதை வாங்கியதா? பெகாசஸ் மென்பொருளை வாங்க செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? பிரெஞ்சு அதிபர் மேக்ரான் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் வந்ததும் அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் நாடும் அதன் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இரு முக்கிய நாடுகள் ஒட்டுக் கேட்பு பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்தியா ஏன் உத்தரவிடக்கூடாது? செல்போன்களை ஒட்டுக்கேட்க அரசு உத்தரவிடவில்லை என்றால் ஒட்டுக்கேட்பை நடத்தியது யார்? அரசுக்கே தெரியாமல், யாருக்கும் கட்டுப்படாத அமைப்பு எதுவும் செல்போன் ஒட்டுக்கேட்பில் ஈடுபட்டதா? இந்திய அரசுக்கே தெரியாமல், வெளிநாட்டு அமைப்பு எதுவும் செல்போன்களை ஒட்டுக்கேட்டதா? செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், தேசிய பாதுகாப்பு பிரச்னையை எழுப்பி உள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: