டெல்லி போலீசாரின் லோகோவை பயன்படுத்தி ஆபாச படம் பார்ப்பவர்களை மிரட்டி ரூ.34 லட்சம் பறிப்பு: 3 பேர் கைது

சென்னை: டெல்லி போலீசாரின் லோகோவை பயன்படுத்தி, ஆபாச படம் பார்ப்பவர்களிடம் ரூ.34 லட்சம் பறித்த 3 பேரை போலீசார்  கைது செய்தனர்.  சென்னை மாங்காடு பகுதியை  சேர்ந்த ராம்குமார் (32), கொளத்தூரை சேர்ந்த கேப்ரியேல் ஜோசப் (37),  திருச்சியை சேர்ந்த தினோசந்த் (29) ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள், ஆன்லைனில் ஆபாச படங்களை பார்க்கும் நபர்களின் ஐடியை   கண்டுபிடித்து, அவர்களை தொடர்புகொண்டு டெல்லி போலீசார் பேசுவதுபோல்,  டெல்லி காவல்துறையின் லோகோவை பயன்படுத்தி, ‘நீங்கள் ஆன்லைனில் ஆபாச படம் பார்த்த குற்றத்திற்கு ரூ.3000 முதல் ரூ.4000  வரை அபராதம் செலுத்த வேண்டும். தவறினால் போலீசார் உங்கள்  வீட்டுக்கு வந்து கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று  மிரட்டியுள்ளனர்.

இதை உண்மை என நம்பிய நிறைய பேர், சுமார்  ரூ.34 லட்சம் வரை வங்கி கணக்கு மூலம் செலுத்தி உள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில்  ஒருவர் நடந்த சம்பவம் குறித்து டெல்லி சைபர் கிரைம் போலீசிரிடம் விசாரித்தபோது, மேற்கண்ட நபர்கள், போலீசார் போல் நடித்து பணம் பறித்தது தெரிந்தது.  அந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில்,  நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடத்தில் வைத்து  3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்து வந்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: