ஒன்றிய அரசு வழங்கிய தடுப்பூசிகளை விட 5 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி தமிழக அரசு சாதனை: ஒரு சொட்டு கூட வீணாகவில்லை

சென்னை: ஒன்றிய அரசு வழங்கிய தடுப்பூசிகளை விட 5 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. மேலும் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-5 தடுப்பூசி போடப்படுகிறது. இதில், ஸ்புட்னிக்-5 தடுப்பூசி, ஒருசில தனியார் மையங்களில் மட்டுமே போடப்படுகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி போடுவதில் மக்களிடையே  ஒரு விதமான பயம் இருந்த நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினார்.

இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டது. இந்நிலையில் மே 7ம் தேதி முதல் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசி தான் என அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் தமிழகத்தில் இருந்து கொரோனா தொற்றை ஒழிக்க முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வந்தார். பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதையடுத்து மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். பல இடங்களில் மக்கள் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தினசரி, 1.50 லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை தடுப்பூசி  போடப்படுகிறது. இதனால், ஒன்றிய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு கிடைக்கும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. மாநில அரசின் நேரடி  கொள்முதலும் அதிகளவு கிடைக்கவில்லை. இதனால், அடிக்கடி தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 91 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது.

மேலும் நேற்று 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்த நிலையில் நேற்று வரை 1,91,50,418 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளை 2 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு விடும். இதையடுத்து, ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து தமிழக அரசுக்கு அனுப்பிய தடுப்பூசிகளை விட 5,88,243 டோஸ்கள் அதிகம் போட்டு தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஒரு சொட்டு தடுப்பூசி கூட வீணடிக்கப்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.  

அதைப்போன்று சென்னையில், 400க்கு மேல் இருந்த தடுப்பூசி மையங்கள் 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதைதவிர, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவனைகளில் வழக்கம்போல் தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி சென்னையில் கடந்த 22ம் தேதி 27,526 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இதுவரை 29,17,777 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: