ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் குழந்தைகளுக்கான நிமோனியா மூளை காய்ச்சல் நோய் தடுப்பூசி-எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ஆற்காடு : ஆற்காடு அருகே குழந்தைகளுக்கான நிமோனியா, மூளை காய்ச்சல் நோய் தடுப்பூசி முகாமை் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனைகளில்  காசநோய்,  இளம்பிள்ளை வாதம், கல்லீரல் தொற்று உட்பட பல்வேறு  வியாதிகள் வராமல் தடுக்க குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஆனால், நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் நியூமோகோக்கல் காஜூகேட்(பிவிசி) நுரையீரல் நோய் கூட்டு தடுப்பூசி அரசு மருத்துவமனையில் போடப்படாமல் இருந்தது. தனியார் மருத்துவமனைகளில்  மட்டுமே போடப்பட்டது.

இந்நிலையில், தேசிய தடுப்பூசி அட்டவணையில் நியூமோகோக்கல்  தடுப்பூசியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி திட்டத்தை தமிழக அரசின் மருத்துவம்  மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் சமீபத்தில் தொடங்கி வைத்தார். பிறந்த குழந்தைகளுக்கு ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் 9 மாதங்கள் என 3 தவணைகளில் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

அதன்படி, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இந்த  தடுப்பூசி நேற்று முதல் இலவசமாக போடப்பட்டு வருகிறது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நியூமோகோக்கல்  நிமோனியா மற்றும் மூளை காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல்  தடுப்பூசி முகாமை எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் துவக்கி வைத்து பேசினார்.

இதில், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் தலைமையில் மருத்துவ அலுவலர்கள் பிரியதர்ஷினி, லாவண்யா, சுகாதார மேற்பார்வையாளர் பழனி மற்றும் சுகாதார செவிலியர்கள் கொண்ட குழுவினர் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டனர். முதற்கட்டமாக 3 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் முத்து உட்பட பலர் உடனிருந்தனர்.

அப்போது, புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தாஜ்புரா ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடந்த முகாமில் மருத்துவ அலுவலர் கோபிநாத் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சத்யநாராயணன், அருண்குமார் மற்றும் சுகாதார செவிலியர்கள் கொண்ட குழுவினர் 7 குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் தடுப்பூசி போட்டனர். மாவட்டத்தில் 14 ஆயிரத்து 820 குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி போடப்பட உள்ளது.

Related Stories: