தாட்கோ திட்டத்தின் கீழ் எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு மானிய விலையில் ஆட்டோ, நான்கு சக்கர சைக்கிள்: அமைச்சர் கயல்விழி வழங்கினார்

தண்டையார்பேட்டை: தாட்கோ திட்டத்தின் கீழ் எஸ்சி, எஸ்டி  வகுப்பினருக்கு மானிய விலையில் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர சைக்கிள்  பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் நேற்று  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆதி திராவிடர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் 10க்கும் மேற்பட்டோருக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி வாகன விலையில் 30% அரசு மானியமும், 65% குறைந்த வட்டியில் கடனாகவும் மற்றும் 5% வாகன விலையை மட்டுமே பயனாளிகள் செலுத்த வேண்டி உள்ளது.  எனவே, இந்த திட்டத்தின் மூலம் பயனடைய பலர் ஆர்வமுடன் பதிவு செய்து வருவதாக ஆதி திராவிடர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு பின்,  கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறையின் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி, துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். இதில் சிறப்பாக பணியாற்றிய ஆதி திராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழைகளை அமைச்சர் வழங்கினார்.

Related Stories: