ஆடிப்பெரும் திருவிழா: தாடிக்கொம்பு கோயிலில் பெருமாள் திருக்கல்யாணம்

திண்டுக்கல்: ஆடிப்பெரும் திருவிழாவையொட்டி தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி நேற்று மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் காசி யாத்திரை, மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது.

திருக்கல்யாணத்தை தொடர்ந்து சவுந்தரராஜபெருமாள், சவுந்தரவல்லி தாயார், ஆண்டாள், தேவி, பூதேவி சமேதமாக திருத்தம்பதியர் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து திருதம்பதியர் கோலத்தில் கோயில் வளாகத்திலேயே பூப்பல்லக்கில் சவுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் உலா வந்தார்.  திருக்கல்யாண வைபவத்திற்கு பின் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் மாலதி, கோயில் பட்டாச்சாரியார்கள் ராஜப்பா, ராமமூர்த்தி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: