நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி: போலீசார் உயிருடன் மீட்டனர்

சென்னை: வயிற்று வலி காரணமாக வாலிபர் ஒருவர் நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை  போலீசார் விரைந்து செயல்பட்டு உயிருடன் மீட்டனர்.சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் நேற்று மாலை திடீரென கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கூவம் ஆற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபரை மீட்க  முயன்றனர். ஆனால் வாலிபர் ஆற்றில் உள்ள சேற்றில் சிக்கியதால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

பின்னர் உதவி ஆய்வாளர் திலகவதி மற்றும் காவலர் சக்தி முருகன் ஆகியோர் கயிற்றின் உதவியுடன் கடும் போராட்டத்திற்கு பிறகு வாலிபரை உயிருடன் மீட்டனர். அதைதொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ராயபுரம் தம்பு லேன் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன்(31) என்றும், இவர் வயிற்றில் உள்ள கட்டியால் கடுமையான வலியால் அவதிப்பட்டதால் தற்கொலை முடிவுக்கு சென்றது தெரியவந்தது. அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: