மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் கலைஞர் நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

மதுரை: மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் கலைஞர் நூலகம் அமைய உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் ரூ.70 கோடி மதிப்பீட்டில், 2 லட்சம் சதுரடியில் ‘‘கலைஞர் நினைவு நூலகம்’’ அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் அறிவித்தார். இதற்காக அங்கு 6 பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தவிர்த்து புதிய இடத்தை தேர்வு செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு பரிந்துரை செய்தது. இதனைத்தொடர்ந்து மதுரை சொக்கிகுளம், மேற்கு யூனியன் அலுவலகம் அருகே, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கருக்கு மேல் உள்ள காலி இடத்தை தேர்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

அந்த இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்தனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘‘இங்கு கலைஞர் நூலகம் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.70 கோடி செலவில் 8 மாடி கட்டிடமாக கட்டப்பட உள்ளது. இது பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதி. 4 ஏக்கருக்கு மேல் உள்ள இந்த இடத்தை நூலகம் அமைக்க தேர்வு செய்துள்ளோம். இடம் தொடர்பாக நான் முதல்வரிடம் எடுத்துக் கூறுவேன். முதல்வர் அறிவிப்பு செய்ததும் திட்ட மதிப்பீடு தயார் செய்து, கட்டுமான பணிகள் தொடங்கும்’’ என்றார்.

Related Stories: