தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக முன்னாள் எம்பி அப்துல் ரகுமான் தேர்வு

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக முன்னாள் எம்பி அப்துல் ரகுமான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு தலைவர் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் வக்பு வாரியத்திற்கான தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இந்த தேர்தலில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். இதற்கான வாக்காளர் பட்டியலை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது. தொடர்ந்து வக்பு வாரிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் சென்னை மண்ணடியில் உள்ள வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் வக்பு வாரியத்தின் தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணை தலைவரும், முன்னாள் எம்பியுமான எம்.அப்துல் ரகுமான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து வக்பு வாரிய தலைவராக தேர்வான அப்துல் ரகுமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வக்பு வாரிய தலைவராக பணியாற்றும் அரிய வாப்பினை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அதற்கு உரிய வேண்டுகோளை வைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீனுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வக்பு வாரியத்தின் பணிகள் வெளிப்படை தன்மையோடு, எத்தகைய அரசியல் காழ்புணர்வு, இடையூறுகளுக்கு இடம் கொடுக்காமல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலன், நாட்டின் நலன் கருதி செயல்படுத்தப்படும். வக்பு வாரியத்தின் எல்லா தகவல்களும் கணினி மையமாக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும். வக்பு வாரியத்திற்கு தொடக்கத்தில் இருந்து வந்த பல்வேறு சொத்துக்கள், பல்வேறு நில பகுதிகள், பல்வேறு கட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: