கடந்த மாதம் 14ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கண்டலேறு அணையில் இருந்து 1 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு கிடைத்தது: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தபடி கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் 12 டிஎம்சி நீர் தர வேண்டும். ஆனால், கடந்த தவணை காலத்தில் 7.34 டிஎம்சி மட்டுமே தமிழகத்துக்கு ஆந்திரா தந்தது. இதனால், 4 டிஎம்சி பாக்கி நீரை தரக்கோரி தமிழக அரசு கடிதம் எழுதியது. இதையேற்று கடந்த மாதம் 14ம் தேதி  தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து 16ம் தேதி தமிழக எல்லைக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. ஆரம்பத்தில் கண்டலேறு அணையில் 1000 கன அடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.  இதன் காரணமாக தமிழக எல்லைக்கு வரும் நீர்வரத்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 696 கன அடியாக உள்ளது.

இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் 1003 மில்லியன் கனஅடி அதவாது 1 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரிகளின் நீர் மட்டம் மேலும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1264 மில்லியன் கனஅடியும், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 629 மில்லியன் கனஅடியும், 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2726 மில்லியன் கனஅடியும், 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2618 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட தேர்வாய் கண்டிகையில் 439 மில்லியன் கன அடி என மொத்தம் 5 ஏரிகளில் 7,676 மில்லியன் கன அடி அதாவது 7.67 டிஎம்சியாக உயர்ந்துள்ளது.

 இதன் மூலம் 7 மாதங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். தற்போது கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், ஏரியின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே, இந்தாண்டில் குடிநீர் பிரச்னை வராது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: