நாளை மறுநாள் சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வு; தேர்வரிடம் தடுப்பூசி சான்று கேட்கக் கூடாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு தேதியை ரத்து செய்ய முடியாது என்றும், அதேநேரம் தேர்வரிடம் தடுப்பூசி சான்று கேட்டு வற்புறுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான CLAT-2021 (கிளாட்) நுழைவு தேர்வு தேதியை தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் குழு கடந்த ஜூன் 14ம் தேதி அறிவித்தது. அதன்படி நாளை மறுநாள் (ஜூலை 23) தேர்வு நடத்தப்படுகிறது.  கொரோனா அச்சம் காரணமாக, தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் குழு அறிவித்த நுழைவு தேர்வு தேதியை ரத்து செய்ய வேண்டும்; அல்லது ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி எல்.என்.ராவ் மற்றும் நீதிபதி அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ‘நுழைவுத் தேர்வு ஜூலை 23ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வை ஒத்திவைப்பது பொருத்தமானதாக இருக்காது. எவ்வாறாயினும், தேர்வு மையங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தேர்வு எழுத வரும் மாணவர்களிடம், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டதா? என்ற கேள்வியை கேட்டு, அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களிடம் தடுப்பூசி சான்று கேட்கக் கூடாது. எனவே, ஒருங்கிணைந்த சட்ட நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது’ எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது.

Related Stories: