தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் விரைவில் உருவாக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் விரைவில் உருவாக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் புதிய குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; நகர்புறங்களில் சாலை அமைக்கும் போது நிலத்தடி நீர் சேமிப்பு பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஏரி, குளங்களை தூர்வாரும் போது இனி கான்கிரீட் தளங்கள் அமைக்கப்படமாட்டாது.

சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடை நீர், நதிகளில் கலக்காமல் தனியாக குழாய்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள்; புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களும் 5 ஆண்டுகாலம் பதவியில் இருப்பார்கள், மாற்றங்கள் இருந்தால் முதலமைச்சர் அறிவிப்பார் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.2,500 கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் விரைவில் உருவாக்கப்படும். நகராட்சி நிர்வாகப் பணிகளுக்கான டெண்டர்களில் தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கார சென்னை திட்டம் குறித்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிப்பார். பொது இடங்களை நல்ல முறையில் பராமரிப்பதே சிங்கார சென்னையின் நோக்கம் எனவும் கூறினார்.

Related Stories: