வடக்கு மின்வாரியம் சார்பில் சேதமான மின்கம்பங்கள், மின்கம்பிகள் சீரமைப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

திருவொற்றியூர்: தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை மின் பகிர்மான வட்டம், வடக்கு திட்டத்தின் சார்பில், நேற்று வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, பொன்னேரி கோட்டங்களில் மின் கூட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இதில் சேதமான மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டன. தமிழகத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி மின்சாரம் வழங்கவும், மழைகாலத்தில் மக்களுக்கு மின் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்த மின்மாற்றிகள், மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் மின் வினியோகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை மின்பகிர்மான வட்டம், வடக்கு திட்டத்தின் சார்பில் நேற்று வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, பொன்னேரி கோட்டங்களில் மின் கூட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் தலைமையில் செயற்பொறியாளர்கள் ராமச்சந்திரன், ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன், ரவி, உதவி பொறியாளர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

நேற்று மாலை வரை சுமார் 30 கிமீ தூரம் வரை பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சுமார் 189 பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டன. மேலும், 40 இடங்களில் தாழ்வான நிலையில் இருந்த மற்றும் சேதமான மின்கம்பிகள் மாற்றப்பட்டன. இதுதவிர, மின்கம்பிகளை உரசியபடி இருந்த பல்வேறு மரக்கிளைகள் அகற்றப்பட்டன.

Related Stories: