திருவண்ணாமலையில் இரண்டரை மாதங்களுக்கு பிறகு உழவர் சந்தைகள் செயல்பட தொடங்கியது-கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டரை மாதங்களுக்கு பிறகு உழவர் சந்தைகள் செயல்பட தொடங்கியது. அதையொட்டி, உழவர் சந்தையை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த கடந்த மே 10ம் தேதி முதல் தளர்வில்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள 8 உழவர் சந்தைகளும் மூடப்பட்டன. தொடர்ந்து, அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில், உழவர் சந்தைகள் நேற்று முதல் திறக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்படும் உழவர் சந்தையை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.

அப்போது, உழவர் சந்தையில் சமூக இடைவெளியுடன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதா?, முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி, கைகளை கிருமிநாசினியால் தூய்மை செய்தல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.மேலும், அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விளக்கினார். இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக சிறப்பு முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது, திருவண்ணாமலை ஆர்டிஓ வெற்றிவேல், வேளாண் வணிகம் துணை இயக்குநர் அரகுமார், நகராட்சி ஆணையர் ரா.சந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதைதொடர்ந்து, திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் வேலைக்கு செல்ல காத்திருந்த 50க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களிடம் கொரோனா விழிப்புணர்வு குறித்து விளக்கினார்.

அப்போது, தினமும் வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்யும் கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் அவசியம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா 3வது அலை வரும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, அதிலிருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே கேடயமாகும் என கலெக்டர் தெரிவித்தார்.

தொடர்ந்து, அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினார். அப்போது, முகக்கவசம் அணியாமல் சைக்கிளில் வந்த சிறுமிக்கு, முகக்கவசம் வழங்கிய கலெக்டர், 3வது அலை சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கினார். அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாமல் வெளியில் வரக்கூடாது எனவும் அறிவுரை கூறினார்.

கீழ்பென்னாத்தூர்: கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் மூடப்பட்ட உழவர் சந்தை கலெக்டர் முருகேஷ் அறிவுறுத்தலின்படி நேற்று குளக்கரை மேட்டில் உள்ள உழவர் சந்தை நிர்வாக அலுவலர் செந்தமிழ் செல்வன் மற்றும் உதவி நிர்வாக அலுவலர் கருணாகரன் முன்னிலையில் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தனர். அப்போது உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர் மற்றும் விவசாயிகள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் காய்கறிகள் விற்பனை செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Related Stories: