ஏமாற்றாதே... ஏமாறாதே... # IVF Cheating Alert

நன்றி குங்குமம் டாக்டர்

கவர் ஸ்டோரி

வாழ்தலே அனைத்து உயிர்களுக்குமான நியதி. மனித இனத்துக்கும் அதுவே பொது விதி. ஆண் பெண்ணுக்கு இடையில் மாயங்கள் நிகழ்த்தும் ஈர்ப்பு விதிகளுக்கும் இதுவே காரணம். ஆனால் இன்றைய வாழ்க்கைச் சூழல், உணவு முறை மாற்றம், சுற்றுச்சூழல், மரபணு மாற்ற உணவு முறை என பலவிதமான நவீன காரணங்கள் மனித இன விருத்திக்குச் சவாலாக மாறியுள்ளது. முன்பை விட நவீன கருத்தரிப்பு மையங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளும் பெருகி வருகிறது.

குழந்தைப் பேறு மனித இனத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்று. அதே சமயம் திருமணம் செய்து கொண்ட தம்பதியரின் முதல் எதிர்பார்ப்பு குழந்தை. இது அவர்களின் சமூக அந்தஸ்து. மலட்டுத்தன்மை உடல் நோயாக மட்டும் இங்கு பார்க்கப்படுவதில்லை, கௌரவக் குறைச்சலாகவும் உணரப்படுகிறது. தாமதமான திருமணம், குழந்தைப்பேற்றைத் தள்ளிப் போடுதல், மதுப்பழக்கம், பாலியல் குறைபாடுகள், உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பல காரணங்களால் குழந்தையின்மைப் பிரச்னையை தம்பதியர் சந்திக்கின்றனர்.

திருமணமான சில மாதங்களிலேயே ஏதாவது விசேஷம் உண்டா என்ற கேள்விக்கு ஆளாகின்றனர். ஒன்றிரண்டு ஆண்டுகளில் அவர்களின் ஆண்மை, பெண்மை இரண்டையும் குத்திக் கிழிக்கும் கேள்விகளை அடுத்தடுத்து சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். தெரிந்தவர்கள் சொல்லும் ஐடியாக்களை எல்லாம் தங்களது வாழ்வில் செயல்படுத்திப் பார்ப்பார்கள்.

சொல்லும் கோயில்களுக்கெ ல்லாம் வேண்டுதல் வைப்பார்கள். ஒரு கட்டத்தில் குழந்தையின்மை சிகிச்சைக்கு கவர்ச்சியான விளம்பரங்கள் கொடுத்து மருத்துவ முகாம்கள் நடத்துபவர்களிடம் விதம் விதமாக ஏமார்ந்தும் போகிறார்கள். பொய்யான விளம்பரங்களை நம்பி லட்சங்களைச் செலவழித்து, தோற்று மனதைத் தேற்றிக் கொள்ளும் தம்பதியரையும் பார்க்க முடிகிறது. எனவே, குழந்தையின்மை சிகிச்சைக்குச் செல்லும் தம்பதியர் ஏமாறாமல் தங்களைத் தற்காத்துக் கொள்ள சில விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தையின்மை மற்றும் லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை நிபுணர் அகிலாம்பாள் இதுகுறித்து பேசுகிறார். ‘‘குழந்தையின்மைப் பிரச்னைக்கான சிகிச்சை எப்போது எடுக்கலாம் என்பதில் பலருக்கும் இங்கு தெளிவில்லை. ஒரு சிலர் திருமணமான இரண்டாவது மாதத்திலேயே குழந்தை நிற்கவில்லை என்று வருகின்றனர். 10 ஆண்டுகள் வரை காத்திருந்து விட்டு குழந்தையின்மை சிகிச்சைக்கு வருபவர்களும் உண்டு. 25 வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள் ஒரு ஆண்டு வரை குழந்தைக்காக காத்திருக்கலாம்.

35 வயதில் திருமணமானால் ஆறு மாதங்கள் வரை காத்திருக்கலாம். 40 வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள் உடனடியாக குழந்தையின்மைக்கான சிகிச்சைக்கு வர வேண்டும். ஏனென்றால் வயதுக்கு ஏற்ப குழந்தை உருவாவதில் பிரச்னைகளின் தன்மையும் மாறுகிறது.

வயதாகும்போது மற்ற உடல் உறுப்புக்களில் ஏற்படும் மாற்றங்களைப் போல கரு முட்டையின் தரம், உற்பத்தி எண்ணிக்கையும் குறைகிறது. விந்தணுக்களின் தரம், வேகம், உற்பத்தி ஆகியவையும் வயதாகும்போது குறைகிறது. இதற்கு ஏற்ப சிகிச்சை முறைகளும் மாறும். வயதானால் குழந்தையின்மைப் பிரச்னை பெண்களுக்கு ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள். இது ஆண்களுக்கும் பொதுவானதுதான். வயதாகும்போது விந்தணுக்களின் வேகம் குறைவதாலும் குழந்தையின்மைப் பிரச்னை உண்டாகலாம். பாலுறவில் ஆர்வம் குறையலாம்.

வயதானால் ஆண்களுக்கு விந்தணுவில் DNA fragmentation அதிகமாகிறது. கருவின் தரம் சரியில்லாமல் போவதால் அடுத்தடுத்து கரு நிற்காமல் கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் ஆண்டுக்கணக்கில் தள்ளிப்போடாமல் குழந்தைப்பேற்றுக்கான சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தைப் பேற்றுக்கான சிகிச்சைகளைப் பொறுத்தவரை 75 சதவீதம் வரை எந்த விதமான சிகிச்சையும் இன்றி குழந்தை உருவாக வாய்ப்புள்ளது. 10 சதவீதம் பேருக்கு சிகிச்சைக்கு வந்த இரண்டாவது ஆண்டில் குழந்தைப் பேறு உண்டாகிறது. 10 முதல் 15 சதவீதம் பேருக்குத்தான் குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

என்ன காரணத்தால் குழந்தை நிற்கவில்லை என்று கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான சிகிச்சைகள் அளித்து குழந்தைப் பேற்றை உருவாக்க முடியும். பெண்களுக்கு ஹார்மோன் பரிசோதனை செய்ய வேண்டும். கரு முட்டை வளர்ச்சிக்கான, முதிர்ச்சிக்கான ஹார்மோன்கள் எப்படி வேலை செய்கிறது என்று பரிசோதிக்க வேண்டியிருக்கும். தைராய்டு ஹார்மோன் சுரப்பு பரிசோதனையும் செய்யப்படும். கருமுட்டைகள் எந்தளவுக்கு உற்பத்தியாகிறது என்று பார்க்க வேண்டும்.

அடுத்தது Baseline scan செய்ய வேண்டும். மாதவிலக்கு ஆன இரண்டாவது நாளில் கருப்பை எப்படி உள்ளது, Endometrial thickness எப்படி உள்ளது, சினைப்பை எப்படி உள்ளது, எவ்வளவு கரு முட்டைகள் உள்ளது, கருக்குழாய் அடைப்பு உள்ளதா, ஒவ்வொரு சினைப்பையிலும் எத்தனை கருமுட்டைகள் உள்ளது என்று பார்க்க வேண்டும்.

3D மற்றும் 4D ultrasound scan மூலமாக கர்ப்பப்பையில் கரு நிற்கும் இடத்தில் ஏதாவது கட்டிகள் உள்ளதா, கர்ப்பப்பை உட்சுவரில் ஏதாவது குறுக்குச் சுவர் உள்ளதா, வேறு ஏதாவது பிரச்னைகள் உள்ளதா என்றும் பரிசோதிக்க வேண்டும். பீரியட்ஸ் ஆகி 7-ம் நாளில் இருந்து 9-ம் நாள் வரைப் கருக்குழாய் எப்படி உள்ளது என்பதை ஒரு எக்ஸ்ரே மூலமாகப் பரிசோதிக்க வேண்டும்.

எல்லாமே ஆரோக்கியமாக உள்ளது. ஆனால், குழந்தை நிற்பதில் மட்டும் பிரச்னை என்றால் Diagnostic laparoscopy பரிசோதனை செய்யப்படும். கருக்குழாய், சினைப்பை பக்கத்தில் உள்ளதா, அடைப்பு உள்ளதா, குடலுடன் இவை ஒட்டிக் கொண்டு உள்ளதா, குழந்தை நிற்கும் இடம் சின்னதாக உள்ளதா அல்லது வேறு பாதிப்புகள் உள்ளதா என்றும் கவனிக்க வேண்டும்.

ஆண்களுக்கு மிக முக்கியமான பரிசோதனை என்பது விந்தணு பரிசோதனை. எனவே, எண்ணிக்கை பார்ப்பது முக்கியம். 15 லட்சம் உயிரணுக்கள் இருந்தாலே குழந்தை உருவாக வாய்ப்புகள் உள்ளது. விந்தணுக்களின் நகரும் தன்மையைப் பரிசோதிப்போம். 32 சதவீதம் வேகம் இருக்க வேண்டும். கரு முட்டை வெளியாகி 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரைதான் கரு முட்டை உயிருடன் இருக்கும்.

அதற்குள் விந்தணு பெண்ணுறுப்பு வழியாக கருப்பைக்குள் சென்று கருக்குழாயை அடைய வேண்டும். விந்தணு வேகமாக வந்தாலே அது கரு முட்டையை அடைய ஒருமணி நேரம் ஆகும். நூற்றுக்கணக்கான விந்தணுக்கள் கரு முட்டையை உடைத்து அதில் ஒரே ஒரு உயிரணு மட்டும் உள்ளே போகும். குழந்தை உண்டாகும் தன்மை நிற்பதற்குள் இந்த விந்தணு கருமுட்டையை சென்றடைய வேண்டும்.

அடுத்து பார்க்க வேண்டியது விந்தணுவின் உருவ அமைப்பு. ஒரு சிலருக்கு விந்தணுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இந்த உருவ அமைப்பு சரியாக இல்லாவிட்டால் கரு முட்டையை உடைத்து உள்ளே போவதில் பிரச்னை உண்டாகலாம். உயிரணுக்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் எவ்வளவு உயிருடன் உள்ளது என்று பார்ப்போம்.

அடுத்தது, உயிரணுக்களின் உற்பத்தி நன்றாக இருக்கும். ஆனால் அது வெளியில் வரும் இடத்தில் அடைப்பு இருக்கும். இவர்களுக்கும் உயிரணுக்கள் இல்லாத மாதிரி இருக்கும். இந்த அடைப்பை சிகிச்சை மூலம் சரி செய்து குழந்தை நிற்கும்படி செய்யலாம். எந்த இடத்தில் அடைப்பு இருக்கிறது என்று பார்த்து அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

உயிரணுக்கள் இல்லை அல்லது குறைவாக இருப்பவர்களுக்கு உயிரணுக்கள் உற்பத்திக்கான ஹார்மோன்கள் உற்பத்தி சரியாக உள்ளதா என்று பரிசோதிக்கப்படும். விரைப்பகுதியில் ஸ்கேன் செய்யப்படும். மரபணு பரிசோதனை மூலம் Y குரோமோசோமை பரிசோதிக்க வேண்டும். Testicular biopsy பண்ண வேண்டும். உயிரணுக்கள் ஏன் இல்லை என்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். உயிரணுக்கள் உற்பத்தியாகும் டியூபில் அடைப்பு உள்ளதா என்பதையும் பயாப்சி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தாம்பத்ய ரீதியாக குறைபாடுகள் இருப்பின் வெஜைனா பக்கத்தில் உள்ள தசைகள் இறுக்கமாக இருக்கும். இதனால் இவர்களுக்கு பெல்விக் பரிசோதனை, உடலுறவு வைத்துக் கொள்வது எல்லாமே கடினமாக இருக்கும். இந்த சதைப்பகுதியை ஊசி மருந்தின் மூலம் தளர்வடையச் செய்து இறுக்கத்தைக் குறைக்கலாம். தாம்பத்யக் குறைபாடுகளை சரி செய்யலாம். Cosmetic gynecology சிகிச்சை மூலம் பெண்களின் தாம்பத்யக் குறைபாடுகளை சரி செய்தும் குழந்தைப் பேற்றை உருவாக்க முடியும்.

முக்கியமாக, IVF சிகிச்சை எடுத்துக் கொள்வதாக இருந்தால் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையில் தகுதி வாய்ந்த நிபுணரின் உதவியோடு செய்துகொள்ள வேண்டும். தம்பதியரின் விந்தணு அல்லது கரு முட்டை கருத்தரிப்புக்கு உதவாத பட்சத்தில் தானம் பெற்று கருத்தரிப்பு செய்துகொள்ளலாம். ஆனால், இது குறித்து வெளிப்படையான விவாதமும், ஒப்புதலும் தம்பதியர் மற்றும் மருத்துவர் இரண்டு தரப்புக்குமே தேவை.

 தம்பதியரின் அனுமதி இல்லாமலோ, தகவல் தெரிவிக்காமலோ IVF வெற்றியடைய வேண்டும் என்று தானம் பெற்ற உயிரணுக்களை பயன்படுத்தினால் அது மருத்துவ தர்மத்துக்கும் எதிரானது. சட்ட ரீதியிலும் குற்றமாகும். சிகிச்சை பெற விரும்பும் தம்பதியர் கட்டண ரீதியிலான விஷயங்களிலும் முதலிலேயே போதுமான விளக்கம் பெற்று சிகிச்சையைத் தொடங்குவது நல்லது!’’

- கே.கீதா

× RELATED IVF சிகிச்சையில் லேட்டஸ்ட்